இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comWednesday 31 October, 2007
தெஹல்கா விரித்த வலை - குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி
சி.என்.என்._ஐ.பி.என்., தொலைக்காட்சியில் ஓர் அரசியல் நேர்காணல். நடத்தியவர் பிரபல அரசியல் பேட்டியாளர் கரன் தாப்பர். கிடுக்கிப்பிடி கேள்விகளால் எதிரே இருப்பவரை சிக்கவைப்பதில் சமர்த்தர். நம்மூர் ஜெயலலிதா, வைகோ முதல் பல தேசியத் தலைவர்களை திக்குமுக்காட வைத்தவர். இந்தமுறை அவருக்கு எதிரே அமர்ந்திருந்தார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
ஒவ்வொரு கேள்வியும் தீப்பந்தாகப் பாய்ந்து வந்து மோதின. எல்லாவற்றையும் தனக்கேயுரிய பாணியில் சாமர்த்தியமாக எதிர்கொண்டார் மோடி. திடீரென ஒரு கேள்வி. அவ்வளவுதான். நெருப்பில் பட்ட ரப்பர் பலூன் போல சுருங்கியது மோடியின் முகம். என்னென்னவோ பேசினார். ‘தாகமாக இருக்கிறது, தண்ணீர் வேண்டும்’ என்றார். பதில் சொல்லாமல் தப்பிக்கும் எல்லாவித முயற்சியிலும் ஈடுபட்டார். விளைவு, பேட்டி பாதியிலேயே முடிக்கப்பட்டது. அவசர அவசரமாக வெளியேறினார் நரேந்திர மோடி.
அப்படியே ‘முதல்வன்’ படத்தில் ரகுவரன், அர்ஜுன் நடித்த காட்சி போலவே இருந்தது. விஷயம் என்னவென்றால், கரன் தாப்பர் கேட்டது கோத்ரா மற்றும் குஜராத் கலவரம் பற்றிய கேள்விதான். மோடி பதிலளிக்கத் தடுமாறியது அப்படியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்தக் காட்சிகள் குஜராத் அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்தது.
மோடியின் தடுமாற்றத்துக்கு இதுவரை பா.ஜ.க. தரப்பில் யாரும் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், அதற்கு பதிலளிக்கும் விதமாக தெஹல்கா இணையதளம் சென்ற வாரம் வீடியோகாட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோத்ரா தொகுதியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான ஹரேஷ் பட் உள்ளிட்ட சிலருடைய பேட்டிகள் ஒளிபரப்பாகின. அவர்கள் அத்தனை பேருமே கோத்ரா மற்றும் குஜராத் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.
கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம்.
ரகசிய கேமரா மூலம் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிப்பது தெஹல்காவுக்கு வழக்கமான விஷயம்தான். இந்தமுறை அவர்கள் குறிவைத்தது நரேந்திர மோடியை. இதற்காக கோத்ரா சட்டமன்ற உறுப்பினர், குஜராத் கலவரத்தில் களத்தில் இறங்கி ‘செயல்பட்ட’ ஏழு பேர், மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அரசு வழக்கறிஞர் ஒருவர் மற்றும் ஐந்து குஜராத் ‘கரசேவகர்கள்’ ஆகியோருக்கு வலை விரிப்பது என முடிவு செய்தது தெஹல்கா நிருபர் குழு. இவர்களுக்குத் தலைமை, ஆஷிஷ் கெய்தான் என்கிற நிருபர். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவர்களைத் தொடர்ந்து சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தனர்.
‘அய்யா, நாங்கள் இந்துத்வாவைப் பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறோம். புத்தகத்தின் பெயர் '‘வி.ஹெச்.பி.யும் இந்துத்வாவும்.’ அதற்கு உங்களுடைய கருத்துக்கள் அவசியமாகின்றன. புத்தகத்துக்காக நாடு முழுக்கத் தகவல்கள் திரட்டிக் கொண்டிருக்கிறோம். நிறையப் பேர் பேசியிருக்கிறார்கள். நீங்களும் பேசினால் புத்தகம் மிகச்சிறப்பாக வரும். குறிப்பாக, கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் குஜராத் கலவரத்தைப் பற்றிப் பேச வேண்டும். இந்துத்வத்தின் பெருமை எல்லோர் மத்தியிலும் பரவும்.'
இதுதான் அந்த நிருபர் ஆஷிஷ் கெய்தான் விரித்த வலை. ‘இந்துத்வா பரவும்’ என்கிற வார்த்தைகள் அவர்களைச் சுண்டி இழுத்துவிட்டன. மளமளவென நடந்த சம்பவங்களை வார்த்தை விடாமல் ஒப்பித்துவிட்டனர்.
அப்படி என்ன சொல்லிவிட்டார்கள் அவர்கள்?
ஒவ்வொரு நபராகப் பார்க்கலாம்.
சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட்:
‘கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பா.ஜ.க. பிரமுகர்கள், பஜ்ரங் தள், வி.ஹெ.ச்பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மோடி, ‘நான் உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால், மூன்று நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும்’ என்றார். அதன்பிறகு பெரிய அளவில் கொலைச்சம்பவங்கள் நடந்த பிறகு எங்களை அழைத்த மோடி, எல்லோரையும் பாராட்டினார்.’
மதன் சாவல் பா.ஜ.க. தொண்டர்:
‘முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஓடினோம். அவர்களை எல்லாம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜாப்ரி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்துப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உடனே நாங்கள் ஆயுதங்களுடன் அந்த வீட்டை முற்றுகையிட்டோம். உடனே அவர் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்து எங்களையெல்லாம் கலைந்து போகச் சொன்னார். நாங்களும் சரி என்றோம். அவர் பணத்தைத் தருவதற்காகக் கதவைத் திறந்ததும் விருட்டென வீட்டுக்குள் நுழைந்துவிட்டோம். உடனடியாக இருவர் அவரை மடக்கிப் பிடிக்க, அவருடைய கையை நான் வெட்டினேன். அவருடைய ஆண்குறியையும் வெட்டினேன். பிறகு அவரைத் துண்டு துண்டாக வெட்டி வீசிவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம். மோடியின் முயற்சியால்தான் எங்களால் சிறையில் இருந்து வெளியே வர முடிந்தது. நீதிபதிகளை இடமாற்றம் செய்து, வசதியான நீதிபதிகளை பணியிலமர்த்தியதால் எங்களுக்கு சுலபமாக ஜாமீன் கிடைத்தது.’
பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி:
‘வழியில் தென்பட்ட கர்ப்பிணிப் பெண் முஸ்லிம் என்று தெரிந்ததும் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவளுடைய வயிற்றில் குத்தினேன். உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து வீசி எறிந்தேன்.’
அனில் படேல் மற்றும் தாபல் ஜெயந்தி படேல்:
‘எனக்குச் சொந்தமான தொழிற்சாலையில்தான் கலவரத்தின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. அந்தப் பணியில் வி.ஹெச்.பி. தொண்டர்கள் ஈடுபட்டனர். எல்லா விஷயமும் போலீஸாருக்குத் தெரியும். ஆனால், அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், விஷயம் வெளியே கசியாதவாறு அவர்கள்தான் பார்த்துக்கொண்டனர். அந்தக் குண்டுகளை வைத்துத்தான் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.’
பிரகாஷ் ரத்தோட்:
‘பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாயா பென் தெருத்தெருவாகச் சென்று தொண்டர்களைக் கலவரம் செய்வதற்கு ஊக்கப்படுத்தினார். ‘முஸ்லிம்கள் ஒருவரைக் கூட விடக்கூடாது. வேகமாகக் கொன்று குவியுங்கள்’ என்று ஆவேசமாகக் கூறிக்கொண்டே நடந்தார்.’
சுரேஷ் ரிச்சர்ட்:
‘முஸ்லிம் மக்கள் இருக்கும் இடங்கள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் நாங்கள் திணறியபோது போலீஸாரே சில இடங்களைச் சுட்டிக் காட்டினர். நாங்கள் அங்கு சென்று கதவுகளை மூடிவிட்டு, அவர்களை உள்ளேயே வைத்து எரித்துவிட்டோம்.’
அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா:
‘கலவரத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு எதிரான வழக்குகள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மோடி சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். காவல்துறை அதிகாரிகள் இந்துக்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
கோத்ரா சம்பவம் மோடியை ரொம்பவே வருத்தப்பட வைத்திருந்தது. அகமதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால், முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட தினத்தை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட வேண்டும் என்றார் மோடி.’
வி.ஹெச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி:
‘மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்குச் சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்குச் சாதகமாக அவர்கள் வாதாடினர்!’
மேலே இருக்கும் கருத்துகள் அத்தனையும் குஜராத் கலவரத்துக்கு மோடியின் பங்களிப்பை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளன.
சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ராமர் பால விவகாரம் தங்களுக்குத் தேனை வார்க்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், தேளை வார்த்திருக்கிறது தெஹல்கா வீடியோ.
விரைவில் நடைபெற இருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இந்த வீடியோ பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். என்ன செய்யப் போகிறார் மோடி?
நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்.
4 Comments:
சூப்பர். அதுவும் அந்த வில்லன்கிட்ட ஹீரோ சொல்ற பஞ்ச் டயலாக் சூப்பர்.
ஆரம்பிச்சிட்டாரு மாமா கும்மிய.. :)
உங்க பிளாக்ல எல்லாரும் படிக்காமலே கமெண்ட் போடறதுக்கு நானா காரணம்.?
அத நீங்க இங்க வந்து பன்றிங்களாக்கும் :(
ஆனா கதை ரொம்ப சின்னதா எழுதிட்டிங்க.
அய்யய்யோ தெய்வமே மறுபடியுமா? :((
Post a Comment