இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner
Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Sunday, 21 December 2008

ஈழத் தமிழர்களுக்கு மட்டும்.. இந்தியத் தமிழர்களுக்கு இல்லை..

அத்திரி என்ற பதிவர் பின்னூட்டங்களை மட்டுமே படித்து , நான் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவன் என்பதை முன்பு நம்பிவிட்டதாகவும் இப்போது அது பொய் என தெரிந்துக் கொண்டது போலவும் ஒரு பதிவை போட்டிருக்கிறார். பின்னூட்டத்தில் ஒரு ஈழத் தமிழரும் என்னைப் போன்ற ஐந்தறிவுகளை பற்றி சிலாகித்து புலம்பி இருக்கிறார். :)

நீங்கள் எல்லாம் நம்ப வேண்டும் என்ற எந்த அவசியமும் எனக்கில்லை. நீங்கள் நம்புவதால் எனக்கு பயன் என்ன ? இழப்பு தான் என்ன?. இப்போதும் சொல்கிறேன். காஷ்மீரின் நிலை வேறு. ஈழத்தின் நிலை வேறு. காஷ்மிர் பிரிவினையை எதிர்த்தாலும் தனி ஈழத்தை ஆதரிக்கிறேன். காஷ்மிர் மக்களுக்கு இந்தியா எந்த குறையும் வைக்கவில்லை. மாறாக சிறப்பு அந்தஸ்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஈழத் தமிழர் நிலை அப்படி இல்லை. அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப் படுவது நிஜம். அதனால் தனி ஈழத்தை ஆதரிக்கிறேன்.

ஆனால் என்னக் காரணத்திற்காகவும் பயங்கரவாதிகளை ஆதரிக்க முடியாது. ராஜிவ் படுகொலை, சக ஈழப் போராளித் தலைவர்கள் படுகொலை என அவர்கள் எவ்வளவோ பாதகங்களை செய்திருக்கிறார்கள். புலிகளை எதிர்ப்பதால் நான் உங்களுக்கு எதிரியாய் தெரிந்தால் அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. என்னை எதிரியாய் நினைப்பவர்களின் நட்புக்கு நான் ஏங்கவும் இல்லை. நான் மட்டுமில்லை.. வேறு எந்த காங்கிரஸ்காரருமே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தான் பேசுகிறோமோ ஒழிய, இதுவரையில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. காங்கிரசை பிடிக்காத சில தமிழக “ நல்ல “ உள்ளங்கள் தான் காங்கிரஸ், ஈழத் தமிழர்களுக்கு எதிரனவர்கள் போல் சித்தரிக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் “சிலரும்” அதை நம்பி சமயங்களில் உளறி வைக்கிறாகள். அதை பற்றி எல்லாம் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. நாங்க என்ன சீசன் அரசியலா செய்கிறோம்? :))))

நானும் இந்த விஷயத்தை பேசாம விடனும்னு தான் நினைக்கிறேன். ஆனால் பின்னூட்ட பெரியசாமிகள் தொல்லை தாங்கலைடா நாராயணா. பதிவு எதை பற்றி இருந்தாலும் இவர்கள் தனி ஆவர்த்தனம் பாட ஆரம்பிச்சிடறானுங்க. நான் என்ன செய்வது? வீட்டை திறந்து வைத்திருந்தால் விருந்தினர்கள் மட்டும் நுழைவார்கள் என்று நினைத்திருந்தேன். இதுவரையில் அப்படித்தான் இருந்தது. சில வேளைகளில் விருந்தினர்களுடன் சேர்ந்து சில தெருநாய்களும் நுழைந்துவிடுகின்றனவே. :(

( இந்தப் பதிவிற்கும் சம்பந்தம் இல்லாத பின்னூட்டங்கள் வரும்.. பாருங்க.. :)) )

Thursday, 18 December 2008

ஈழத்து எதிரிகளும் கோடம்பாக்கத்து கோமாளிகளும்

ராஜிவ்காந்தி படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் இந்த அளவு ஈழ தமிழர்களுக்கான ஆதரவு குரல் இருந்ததில்லை என நினைக்கிறேன். ஈழ மக்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும் மிக பலமாகவே குரல்கள் எழுந்தன. எல்லாம் மிக அழகாக சீராக போனதாகவே நினைவு. தினம் தினம் இந்த குரல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அதுவும் ஒரே குரலாக இருந்தது. ஈழ மக்கள் படும் அவதிக்கு எதிராக மக்கள் பெரும் ஆதரவு உருவானது.

வழக்கமாக‌ ஈழப் போராட்டங்களுக்கு எதிராக பேசுபவர்கள் கூட அந்த மக்கள் படும் துயரங்களை பார்த்து அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு எதிராக எதுவும் பேசாமல் அல்லது பேச முடியாமல் இருந்தார்கள். எல்லாம் நல்லபடியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. அனைத்துக் கட்சி கூட்டம்.. ராஜினாமா முடிவு.. எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது.

போராட்டங்களின் நோக்கம், இலங்கை அரசாங்கத்துக்கு அரசியல் நிர்பந்தம் குடுத்து போரை நிறுத்தவைப்பது. பாதிக்கப் பட்ட மக்களுக்கு மருந்து பொருள் உட்பட்ட நிவாரணம் வழங்குவது.. அந்த குறிக்கோளை நோக்கி எல்லாம் ஓரளவு நன்றாகவே போய்க் கொண்டிருந்தது.. எந்த எதிர்ப்பும் அல்லது தடுமாற்றமும் அல்லது நோக்கச் சிதறலும் இல்லாமல்..

இடையில் வந்தார்கள் பாரதிராஜா, சத்தியராஜ், அமீர், சேரன் , சீமான் போன்ற கோடம்பாக்கத்து கோமாளிகள். வந்தோமா ஈழ மக்களுக்கு ஆதரவும் சிங்கள அரசுக்கு எதிர்ப்பும் தெரிவித்துவிட்டு மூடிக்கொண்டு வந்தோமான்னு இருந்திருக்கணும். ஏன்னா, அதான் எல்லாம் சரியான திசையில் போய்ட்டு இருக்கே.. பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து திரைத் துறையினரும் தங்கள் குரலை எழுப்பியதன் மூலம் சப்தம் இன்னும் பலமாகி இருக்கும்.

ஆனால் இந்த கோமாளிகள் என்ன செய்தார்கள்?.. ஈழ மக்கள் என்ற தளத்திலிருந்து பிரபாகரன் என்ற தனிமனித துதிபாடலுக்கு சென்றார்கள். ஈழமக்கள் படும் அவதியிலிருந்து அவர்களைக் காக்கணும்.. பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கணும்...அதற்கு போரை நிறுத்தணும்.. அதற்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கணும்... அதைவிடுத்து புலிகள்.. தடைநீக்கம்.. வீரன் .. வெங்காயம் என்று எது இப்போதைக்கு தேவை இல்லாததோ அதை நோக்கி போராட்டத்தை திசை திருப்பினார்கள்.. அதோடு விட்டார்களா? அமைதிப் படையில் சென்ற சில ராணுவ வீரர்கள் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த இந்திய ராணுவ வீரர்களையும் இந்தியாவையும் எதிர்த்து அவமதித்து பேசினார்கள்.. இவனுங்களுக்கு ஈழத்தில் தவறிழைத்த ராணுவ வீரர்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தார்கள். இரவு பகலாக‌ எல்லையில் நின்று நம்மை காக்கும் கண்ணிய வீரர்கள் இவனுங்களின் நினைவுக்கு வரவே இல்லை. ஆகவே ஒட்டுமொத்தமாக இந்தியா மற்றும் இந்திய ராணுவத்தினை குறை கூறினார்கள்...

மக்களின் உணர்ச்சியைத் தூண்டி கோடிகோடியாக காசு சம்பாதிக்க இந்திய ராணுவத்தை புனிதப் படையாக காட்டிக் கொள்ளை அடிக்கும் இந்த குள்ள நரிக் கும்பல் ராமேஷ்வரத்திம் நின்றுகொண்டு பிரபாகரன் காதுகுளிரவேண்டும் என இந்தியாவை குறை சொல்லி கத்திக் கூப்பாடு போட்டது. ஈழ மக்கள் இதைத் தான் எதிர்பார்க்கிறார்களா? அல்லது சரியான தீர்வையா?

இது போதாதா என்னடா காரணம் கிடைக்கும் கோதாவில் குதிக்கலாம் என்று இருப்பவர்களுக்கு. ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தவர்களும் புலிகள் எதிர்ப்பு என்ற பெயரில் எதிர்ப்புக் குரல் கொடுக்க தொடங்கினார்கள்.

இந்த கோ.கோமாளிகளின் கோமாளித்தனமான பேசுக்களுக்காக இவர்களை தமிழக அரசாங்கம் கைது செய்தது. இவர்களோடு சேர்ந்தார்கள் வையகத்து கோமாளியும் அவரது அடிபொடியும். இலங்கையில் என்ன நடக்குதுன்னு சொல்றேன் பேர்வழின்னு கிள‌ம்பி தனித் தமிழ்நாடு என்பதில் முடித்தார்கள். இதனால் இவர்களையும் கைது செய்ய வேண்டியதாயிற்று.

ஈழமக்களுக்கு ஆதரவு என்ற ஒரே நோக்கத்துடன் நடைபெற்ற போராட்டங்களும் ஆதரவுக் குரல்களும் இந்த கோமாளிகளின் கைது.. இவர்களுக்கு ஆதரவு/எதிர்ப்பு.. ஜாமின்.. விடுதலை என அப்படியே திசை மாறியது. ஒரே குரலாக இருந்ததை பல குரல்களாக மாற்றிய பெருமை இந்த ஜோக்கர்களையே சேரும். பிறகு ஈழமக்களுக்கு ஆதரவு என்ற நிலை மாறி புலிகள் எதிர்ப்பு என்ற பேச்சு பலமாக ஒலிக்க ஆரம்பித்தது. முழுமையாக இருந்த ஈழ ஆதரவு நிலை பாதியாக குறைந்தது. இதுதான் ஈழத் தமிழர்களுக்கு இந்த கோமாளிகள் செய்யும் நன்மையா? இவர்கள் தான் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்களா?

பிறகு.. மிதிக்க வேண்டிய இடத்தில் மிதித்ததால் கொஞ்சம் பொத்திக் கொண்டு இருந்தார்கள். புலிகள் எதிர்ப்பு என்ற பெயரில் எழுந்த எதிர்ப்புக் குரல்களும் குறைந்தன. பிறகு மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம்... டில்லி பயணம்... வெளியுறவு துறை அமைச்சரை இலங்கைக்கு அனுப்ப முடிவு .. என்று நிலமை ஓரளவு சீரடைந்தது... பொது மக்கள் மீதான தாக்குதலும் ஓரளவு குறைந்து புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்துக்கிடையிலான போராக மட்டும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வைகோ மட்டும் அவ்வப்போது கருணாநிதியை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்.. ஏன் சொன்னபடி ராஜினாமா செய்யவில்லை என்று.. அட கூறுகெட்ட குப்பா, உங்க கட்சியில இருக்கிற 2 பேரும் ஏனய்யா இன்னும் ராஜினாமா செய்யவில்லை? கருணாநிதியை பற்றி உமகென்ன‌ய்யா கவலை.. உம்ம வேலையை ஒழுங்கா பார்க்க வேண்டியது தானே.. ராஜினாமா செய்து இந்தியாவின் கவனத்தை ஈர்க்க வேண்டியது தானே.. அப்போ தானே இலங்கை பிரச்சனைன்னா விடுதலைபுலிகள் மற்றும் ராணுவத்துக்கிடையேயான போர் என்பது மட்டுமில்லை.. அது அப்பாவி தமிழ் மக்களின் வாழ்க்கை பிரச்சனையும் கூட என்று தமிழகம் தாண்டிய பிற மாநில மக்களுக்கும் புரிந்திருக்கும். அதை செய்யாமல் தனி தமிழகம், பிரபாகரன் துதிபாடல் என்று விஷயத்தை திசை திருப்பிவிட்டு ஈழ மக்களின் நிஜ எதிரியாக இருக்கிறீர்களே நீங்களும் அந்த கோ.கோமாளிகளும்...

இப்போது இந்திய வெளியுறவு அமைச்சரை இலங்கைக்கே அனுப்பி போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் குடுக்க முடிவு செய்துள்ள நிலையில் மீண்டும் சீமான் என்னும் அரைவேக்காடு பழைய பல்லவியை ஆரம்பித்திருக்கிறது. ஈழ மக்களின் துயரங்களை பற்றி பேசியதைவிட பிரபாகரன் பிரபாகரன் என்று பொலம்புவதையே தொழிலாகக் கொண்டுள்ளது அந்த ஜந்து. அதாவது ஓரளவு நிலைமை சீரடைந்து ஈழ தமிழர்களுக்காக மீண்டும் சில நல்ல முயற்சிகளை அரசாங்கம் எடுக்கும் போது தேவை இல்லாமல் பேசி எதிர்ப்புக் குரல்களை மீண்டும் எழுப்புகிறது இந்த அரைலூசு முண்டம்.

இவனைப் போன்ற ஆட்கள் இந்தியாவை குறை சொல்லும்போது கர்நாடகா தண்ணீர் கொடுக்க மறுக்கும் போது இதை யாராவது கேட்கிறீர்களா என்ற கீறல் விழுந்த ரிக்கார்டை போடுகிறார்கள். நான் சொல்கிறேன்.. கர்நாடகாவை குறை சொல்ல தமிழனுக்கு யோக்கியதையே கிடையாது.. ஏன் என்று விரைவில் தனிப்பதிவாக போடுகிறேன்.

புலிகள் ராஜிவை கொன்றார்கள் என்று சொல்லும் காங்கிரசார், காந்தியை கொன்றவனை இந்திராவை கொன்றவனை என்ன செய்தார்கள் என்று கேட்டிருக்கு இந்த முண்டம். அடேய் வீரவெங்காயம்.. அவர்களுக்கெல்லாம் காங்கிரஸ்காரர்கள் பாராளுமன்ற வளாகத்தில் சிலைவைத்திருக்கிறார்களா? இல்லை கோவில் கட்டி வழிபடுகிறார்களா? இல்லை அவர்களுக்கு தியாகி பட்டம் குடுத்திருக்கிறார்களா?

எதற்கெடுத்தாலும் காங்கிரஸ்காரர்கள் ராஜிவ் படுகொலை என்ற பல்லவியையே பாடுகிறார்களாம். அட அல்லக்கைகளே.. எப்போதாவது எதற்கெடுத்தாலும் இந்திய அமைதிப் படை செய்த தவறுகள் என்ற பல்லவியையே பாடுகிறார்கள் என்று சொல்லி அந்த மக்களின் அவதியை கொச்சை படுத்தி இருக்கிறோமா? அப்படி சொல்லவும் விரும்பவில்லை. ஏன்னா அன்று நடந்த தவறுகள் கடுமையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் தான் அதை நாங்கள் துன்பியல் சம்பவம் என்ற ரீதியில் கூட கொச்சை படுத்தவில்லை..உங்களுக்கு மட்டும் ராஜிவ் உயிர் துச்சமாக தெரிகிறதா? ராஜிவ் படுகொலை துன்பியல் சம்பவம் என்று சொல்லி கொச்சைபடுத்திய பிரபாகரன் அமைதிப் படையின் தவறுகளையும் துன்பியல் சம்பவம் என்று ஏன் விடவில்லை? அமைதிப் படையின் தவறுகளுக்கு ராஜிவ் குற்றவாளி என்று நினைத்தால் ராஜிவை கொன்றதற்காக பிரபாகரனும் புலிகள் பயங்கரவாத அமைப்பும் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். ராஜிவுக்கு ஒரு நீதி இந்த பயங்கரவாதிக்கு ஒரு நீதியா?

இந்த கோமாளிக் கூட்டம் மறுபடியும் முட்டாள்தனமாக உளறினால் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு தளம் பெரிய அளவில் குறையும் என்பது நிஜம். இது தேவை இல்லாமல் அரசாங்கத்தை உசுப்பிவிடும் செயல் தான். இவன் சிறையில் இருக்கும் போது இவனுடன் இருந்தவர்கள் எல்லாம் சொந்த அண்ணன் தம்பிகளை கொன்றுவிட்டு சிறைக்கு வந்தார்களாம். பார்ப்பணன் போன்ற எதிரிகளை கொல்லாமல் அண்ணன் தம்பிகளை கொன்றுவிட்டார்கள் என்று முத்துக்களை உதிர்த்திருக்கிறது இந்த அரைவேக்காடு.

தெரிந்தோ தெரியாமலோ உயர்பதவிகளில் பிராமண‌ர்கள் இருக்கும் போது இது போன்ற லூசுத் தனமான உளறல்கள் இவனுக்கு எந்த பெரிய பிரச்சனையையும் உண்டாக்காது.. ஆனால் ஈழ மக்களுக்கு ஆதரவாக உருவாகும் சூழலை நிச்சயம் பாதிக்கும். ஆகவே இவனைப் போன்ற ஈழதமிழர்களின் எதிரிகளை அடையாளம் காணவேண்டும். ஒன்று ஆக்கப் பூர்வமான உதவி செய்.. இல்லை எனில் மூடிக் கொண்டு போய்விடு.

வெளியில் சொல்ல விரும்பாத .. என்னால் முடிந்த ஆக்கப் பூர்வமான உதவியை செய்தவன் என்ற யோக்கியதையில் இதை சொல்ல உரிமை இருப்பதாலேயே இவனை போன்ற ஜந்துக்களை மூடிக் கொண்டு இருக்க சொல்கிறேன்.

Tuesday, 4 November 2008

இலங்கை விஷயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு - No kummi Please


இலங்கை பிரச்சனையில் பெரும்பாலானோர் ஒன்றும் புரியாமலே உணர்ச்சிவசப் பட்டுக் கொண்டு வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறோம்.மலையகம் பற்றி நமக்கு சில விஷயங்களில் தெளிவை கொடுக்கும் விதத்தில் இந்த பேட்டி அமைந்திருக்கிறது.  நண்பர் நிர்ஷனின் வலைப்பூவில் நண்பர் கல்வெட்டு சில நல்ல கேள்விகளை  கேட்டிருக்கிறார். அதற்கு திரு.திலகர் விரைவில் பதில் தருவதாக சொல்லி இருக்கிறார். அதில் நமக்கு மேலும் பல தகவல்கள் தெரியவரலாம். 

இலங்கை பிரச்சனையில் விருப்பமுள்ளவர்கள் குறிப்பாக இந்திய வம்சாவளியினர் பற்றி அறிந்துக் கொள்ள விரும்புபவர்கள் இந்த பதிவை முழுதாக பொறுமையாகப் படிக்கவும்.

நண்பர் நிர்ஷனின் பதிவு இங்கே..

வலை நண்பர் சேவியர் இன் மல்லியப்பூசந்தி திலகருடனானநேர்காணலை தமிழோசை பத்திரிகை பிரசுரித்திருந்தது। ஈழத்து இலக்கிய ஆர்வலர்களில் ஒருவர், சமூக ஆர்வலர், சிறந்த நண்பர் என நிறைய விடயங்களை திலகர் பற்றிக் கூறலாம் சேவியருடானான பதிவுத் தகவல் பரிமாற்றங்கள் தான் இந்த நேர்காணலுக்கு வழிவகுத்தது எனலாம்।
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட,அநேக இந்தியர்களால் அறியப்படாத ஒரு சமுதாயம் பற்றிய குறிப்பாகவும் அவருடைய நேர்காணல் அமைந்துள்ளது। அந்த நேர்காணலை இங்கு தருகிறேன்। படத்தை சொடுக்கியும் பார்க்கலாம்।


உங்கள் ‘மல்லியப்பு சந்தி’ கவிதை நூலின் பாடுபொருள் என்ன?

ஒரு உழைப்பாளர் வர்க்கத்தின் வாழக்கைப்பரிமாணத்தையும் அதன் வலிகளையும், அவலங்களையும் பாடுபொருளாகக் கொண்டதே ‘மல்லியப்பு சந்தி’ ஆகும்। இதில் முக்கிய விடயம் இந்த உழைப்பாளர் வர்க்கம் யார் என அடையாளம் கண்டு கொள்வதில்தான் இருக்கிறது।இலங்கையில் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் தென்பகுதியிலும் தேயிலை இறப்பர் தோட்டங்களில் ‘தினக்கூலிகளாக’ வேலைசெய்யும் தொழிலாளர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும்தான் ‘மல்லியப்பு சந்தி’ எடுத்துக்காட்டும் மக்களாகும். இவர்கள் ஏறக்குறைய 220 ஆண்டுகளுக்கு முன்பு தெனிந்தியாவிலருந்து குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து (திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்) ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலோடு அழைத்துவரப்பட்டு கூலிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர். 

என் பாட்டனார் இவ்வாறு வந்தவராவார். இவர்கள் இலங்கைக்கு நடக்கவைத்தே அழைத்துவரப்பட்டனர் என்றும் அவ்வாறு வருகையில் பசியினாலும், நோயினாலும் பாதைகளிலேயே செத்து மடிந்ததைச் சொல்லும் சோக வரலாறும் உண்டு. (பதிவு- மரணத்தில் தொடங்கும் வாழ்வு- மல்லியப்பு சந்தி). இவர்கள்தான் இலங்கையில் பெருந்தோட்டங்களை உருவாக்குவதற்கு உதிரத்தைக் கொடுத்துள்ளனர்.

இவர்களின் வாழிடமாக 10 ஒ 12 அடிகள் பரப்பளவான அறைகளைக் கொண்டதான தொடர் ல(h)யங்கள் வழங்கப்பட்டன. இன்றும் கூட ழுழு குடும்பமுமே அந்த அவலம் நிறைந்த லைன் அறையில் வாழந்து கொண்டு ( பதிவு – வரையப்படாத லைன்கள் - மல்லியப்பு சந்தி) தினக்கூலிகளாக இருக்கிறார்கள் என்பது அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிற மிகப்பெரிய மனித அவலமாகும்.


இந்த மக்கள் எல்லோரும் தமிழர்களா? அவர்களின் இலங்கையின் குடியுரிமை நிலை என்ன?

இவர்களுள் 99வீதமானோர் தென்னிந்திய தமிழர்களே. ஏனையோர் மலையாளிகள் மற்றும் தெலுங்கர் ஆவர். இலங்கையில் அரசியலமைப்பின் பிரகாரம் அங்கு வாழும் மக்கள் தொகையினரின் அளவின்படி இனங்களுக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில் சிங்களவர் (01), இலங்கை தமிழர் (2), முஸ்லீம்கள் (3), இந்திய தமிழர் (4) ஏனையோர் (5) எனவும் பாகுபடுத்தப்பட்டுள்னர். அரச பொது படிவங்களில் ‘இனம்’ என ஒதுக்கப்ட்டிருக்கும் கூட்டில் நாம் (4) என பதிதல் வேண்டும். அந்தளவுக்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் தனியொரு இனமாக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளோம்.

இதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பூர்வீகமாக வாழும் இலங்கை தமிழர்கள் (2) என குறிப்பிடுதல் வேண்டும். இவர்களை மையப்படுத்தியே ஈழப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பொதுவான வழக்கில் “ஈழத்தமிழர்கள்” என்றும் இந்திய வம்சாவளி தமிழர்கள் “ மலையகத் தமிழர்கள்” என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இனத்தால், மொழியால், பண்பாட்டினால், மதவழிபாடுகளால் (பெருமளவில் இந்துக்கள், அடுத்து கிறிஸ்தவர்கள்) இவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழர்களே. ஆனால் இவர்கள் வேறுபடுவது “இலங்கையின் குடிமக்கள்” என்ற விடயத்தில்தான்.

இலங்கையில் உள்ள ஏனைய இனங்களில் இருந்து மலையகத்தமிழர்கள் வேறுபடுவது இவர்கள் இன்றும் குறித்த ஒரு சட்டத்தின் கீழ் இலங்கையில் வதிவிட பிரஜைகளாக ( By Registration) பதியப்பட்டிருப்பதுதான். குடியுரிமை (By Decent) உள்ளவர்களாக இல்லை. இவர்களின் பதிவுக்காக
இவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அது கிழிந்தாலோ, தொலைந்தாலோ இம்மக்கள் கிழிந்த அல்லது தொலைந்த பிரஜைகள்தான். அதன் பின் தங்களை அடையாளப்படுத்த பல பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். அந்த பிரயத்தனங்களில் தோற்றுப்போன எத்தனையோ பாமரமக்கள் அவர்களின் பிள்ளைகள் அநாதைகளாக வாழ்கின்றனர். அண்மையில் (ஆகஸ்ட் 23 2008) நடந்த மாகாண சபை தேர்தலில் கூட ஏறக்குறைய 10000 பேர் வாக்களிக்க முடியாமல் போன துரதிஸ்டமெல்லாம் நடந்துகொண்டுதான இருக்கிறது. தவிர அபிவிருத்தித்திட்டங்கள் எனும் போர்வையிலும், கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டங்கள் மூலமும் மலையக மக்களின் செறிவைக் குறைக்கும் அடக்குமுறைகளும் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
(பதிவு: கூடைபுராணம், நமது கதை, விடிவு, மரணத்தில் தொடங்கும் வாழ்வு – மல்லியப்பு சந்தி)

மலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான வழிகள் உண்டா?

நிச்சயமாக உண்டு. இந்தியாவிலிருந்து இந்த மக்கள் இந்திய அரசின் உடன்பாட்டோடுதான் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்கள். பின்னர் 1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த அதேவருடத்தில் மலையக மக்களுக்கான இலங்கை குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டு பறிக்கப்பட்டது. இவர்கள் நாடற்றவர்களாயினர். பின்னர் அப்போதைய இந்நதிய பிரதமர் சாஸ்திரி அவர்களுக்கும் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கும் செய்யப்பட்ட “சிறிமா- சாஸ்திரி” ஒப்பந்தம் மூலம் ஒரு தொகுதி மக்கள் இந்தியாவுக்கு மீண்டும் திருப்பிப் பெற்றுக்கொள்ளப்பட்டனர். 

இவர்கள் இன்று தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களிலும் வாழ்கிறார்கள்.
அதேநேரம் மலையக மக்களின் ஒரு தொகுதியினரும் இந்தியாவில் அகதியாக முகாம்களில் வாழ்கின்றனர் என்பது ஈழத்தமிழ் அகதிகள் பற்றி தெரிந்த பலரும் அறியாத செய்தி. இந்தியா திருப்பி;பெற்றுக்கொண்டாலும் இந்த மக்களுக்கான புனர்நிர்மாண பணிகளை மேற்கொள்ளாமையினாலேயே இவர்கள் அகதியாக வாழ்கின்றனர்.

நான் இந்தியா வரும்போதெல்லாம் இவ்வாறு திரும்பி வந்த எங்கள் உறவுகளை பார்க்கத் தவறுவதில்லை. என் “மல்லியப்பு சந்தி” தொகுதிக்கான முன்னுரையைக்கூட இவ்வாறு இந்தியா வந்து சேர்ந்த என் உறவுக்காரரான என் குருவிடமே பெற்றுக்கொண்டுள்ளேன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அத்துடன் இந்த உறவுகள் இலங்கையிலிருந்து திரும்பி வருகையில் இந்தியாவை தமது தாய்நாடாக கருதி பெற்றதாயைக் கூட அங்கே தவிக்கவிட்டு வந்த அவல நிலையும் உண்டு.(பதிவு- பொட்டு, மீண்டும் குழந்தையாகிறேன்- மல்லியப்புசந்தி).
மலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான ஒரே வழி அவர்கள் இலங்கையின் குடியுரிமையாளர்களாக பிரகடனப்படுத்தப்படவேண்டியதுதான். இதற்காக சான்றிதழ் வழங்கப்படகூடாது. இதனை இலங்கை அரசாங்கமே செய்யவேண்டும். இதற்காக இந்திய அரசு தனது அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும். அதனைச் செய்யவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு. இப்போது இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் 15 லட்சம் பேறும் இலங்கையின் வதிவிடபிரஜைகளாகவும் இந்திய பிரஜையாக அல்லாமலும் இந்து சமுத்திரத்தில் தத்தளிக்கும் “பார்க்கு நீரிணை”பிரஜைகளாகவுள்ளனர்.
இந்தியா எங்களைத் திருப்பிப்பெறவேண்டாம். குறைந்த பட்சம் இலங்கை குடியுரிமையாளர்களாக பிரகடப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையாவது செய்யவேண்டும் என்பதுதான் இந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கை எழுத்தாளர்கள் என்றாலே “ஈழப்பிரச்சினையையும்” அதன் பாதிப்புக்களையும் தான் எழுதுவார்கள் எனும் நிலை தமிழகத்தில் உண்டு. அதன் காரணம் என்ன நினைக்கிறீர்கள்?

நான் மேலே சொன்ன விடயங்கள் பற்றிய தெளிவின்மை ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது ஈழப்பிரச்சினையின் வியாபகமாக இருக்கலாம். 

அதேநேரம் மலையக மக்களுக்கும் ஈழப்பிரச்சினைக்கும் தொடர்பில்லை என சொல்லிவிடமுடியாது. ‘தமிழர்கள்’ என்ற பொது அடையாளத்தினால் ஈழப்பிரச்சினையின் பாதிப்புக்களில் மலையக மக்களும் அடங்குகின்றனர்.

மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினர் 1970களில் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் குடியேறிவாழ்கின்றனர். 

அவர்கள் நேரடியாக யுத்தத்தினால் பாதிப்படைகின்றனர். தவிர நான் சொன்ன பிரஜாவுரிமை பிரச்சினை காரணமாக ஆள் அடையாள அட்டை வழங்கப்படாத அல்லது அடையாள அட்டை இருந்தாலும் தமிழர்களென்ற காரணத்தினால் சந்தேகத்தின் பேரிலும் ஏராளமான மலையக இளைஞர் யுவதிகள் ஈழப்பிரச்சினையின் பெயரில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகின்றனர்.

மலையக மக்களின் வாழ்க்கையைபற்றி மட்டும் பாடுவது ஈழம் என்ற முதன்மை பிரச்சினையின் தீவிரத்தை நீர்க்கச்செய்யாதா?

நிச்சயமாக இல்லை. பாரதி சாதியத்துக்கு எதிராகவும் பெண்விடுதலைக்காகவும் பாடியதனால் அதேகாலத்தில் அவனது சுதந்திரத்துக்கான பாடுகை நீர்த்துப்போனதா என்ன? முதலில் ஈழத்து தமிழ் இலக்கியம் பற்றி புரிந்துகொள்ளுதல் வேண்டும். பேராசியர் கா.சிவத்தம்பி அவர்கள் இப்படி கூறுகிறார். ‘ஈழத்து இலக்கிய நதி என்பது பல ஓடைகளின் சங்கமிப்பாகும். இதில் யாழப்பாணம் வரும், மட்டக்களப்பு வரும்,( வடக்கு, கிழக்கு) கொழும்பு வரும், இஸ்லாமிய வாழ்க்கை வரும், மலையக வரும். இந்த எல்லா ஓடைகளினதும் சங்கமிப்புதான் ஈழத்து தமிழ் இலக்கிய நதியின் பிரவாகமாகும்’.(மூலம்- ‘மல்லியப்பு சந்தி’ இறுவட்;டு அறிமுக உரை).எனவே ஈழத்து இலக்கியப்பபரப்பில் மலையக இலக்கியத்துக்கு தனியான ஒரு இடமுண்டு. மலையக இலக்கியம் என்று வரும்போது மலையக மக்களின் வாழ்க்கையையும் வலிகளையும் பாடுவதுதான பொருந்தும். அதுதானே சரியானதும் கூட. 

அதனையே மல்லியப்பு சந்தி யும் செய்கிறது. அதே நேரம் பொதுப்படையான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நாம் பாடாமலில்லை. (பதிவு:- வேள்வி தீயொன்று வேண்டும், பிரிவு, - மல்லியப்பு சந்தி)அடிப்படையில் குடியுரிமை என்ற கோவணத்தடனாவது வாழும் இலங்கைத் தமிழர்கள்களோடு வாழும் மலையக மக்கள் அந்;த குடியுரிமை என்ற கோவணம் கூட இல்லாமல் நிர்வாணமாக நிற்கையில் அதுபற்றி தனியாக பேசுவது, பாடுவது எந்தவகையிலும் ஈழப்பிரச்சினையை நீர்க்கச்செய்யாது என நினைக்கிறேன்.
ஈழப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட ‘திம்பு கோட்பாட்டில்’ (பூட்டான் நாட்டில் நடைபெற்றது) இந்தியா வம்சாவளி மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படவேண்டும் எனும் கோரிக்கை தமிழர் தரப்பில் முன்வைக்கப்பட்டமையை நன்றியுடன் நினைவு கூரக்கடமைப்பட்டுள்ளேன்.

இலங்கையில் மலையக மக்களின் நாட்கூலி 170 ரூபா அரிசி 65 ரூபா என்று அறிகிறோம். இந்த நிலை தமிழர்களுக்கு மட்டும் தானா?

இல்லை. விலைவாசி உயர்வு என்பது எல்லோருக்கும் பொதுவான பிரச்சினைதான். ஆனால் மலையக மக்களுக்கான பிரச்சினை வருவாய் சம்பந்தப்பட்டதுதான். ஏனைய சமூகங்களைவிட இந்த மக்களின் வருவாய் அளவு மிகக்குறைவாகும்.

மலையகத்தமிழர் பதினைந்து லட்சம் பேரில் 90 வீதமானோர் தொழிலாளர் சார்ந்த குடும்பங்களாகும். ஏனையோர் அரச, தனியார் துறைகளிலும் வியாபாரத்துறையிலும் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளி ஒருவருக்கான நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 170 ரூபா. சராசரியாக ஒரு குடும்பத்தில் ஐந்துபேராகும். குடும்பத்தலைவன், தலைவி இருவரினதும் உழைப்பு ஒருநாளைக்கு 340 ரூபா (இந்திய மதிப்பில் 125ரூபா). இப்போது இந்த குடும்பத்தின் உணவு கல்வி, சுகாதாரம் ஏனைய நலன்களின் நிலையை நீங்களே புரிந்துகொள்ளலாம்.
(பதிவு – ஒப்பந்தம்- மல்லியப்பு சந்தி)

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகமக்கள் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

இலங்கைப்பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் சிலரினது அரசியல் விளையாட்டுக்களை தவிர்த்து விட்டுப்பாரத்தால் தமிழக மக்களிடையே இருக்கும் ஆத்மார்த்தமான ஆதரவினையும் பற்றுதலையும் எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடமுடியாது. அதனையும் தாண்டி உங்கள் சட்டவரையறைக்குள் என்ன செய்யலாம் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் மலையக மக்கள் தொடர்பில் தமிழக மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என எதிர்பாரக்கிறோம். நாங்கள் நேரடியாக தமிழகத்தில் உறவுகளைக் கொண்டுள்ளதோடு இன்றும் கூட இந்திய வம்சாவளியினர் என்றே பதியப்பட்டும் அழைக்கப்பட்டும் வருகிறோம். இந்தியாவின் ஆதரவை நாங்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லாமலில்லை. 

தமிழக வணிக சஞ்சிகை ஒன்று 10 வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பு எழுதியிருந்தது. அதில் ‘
இலங்கையில் மலைசாதி மக்கள் ஒரு தொகுதியினர் வாழ்கின்றனர். அவர்களும் தமிழ்தான் பேசுகிறார்கள்
’ என குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு மனம் நொந்துபோனேன். இந்திய வம்சாவளி தமிழர்களாக மலையக மக்கள் என தமது தேசியத்தை வலியுறுத்தி நிற்கும் ஒரு சமூகத்தை இது கேவலப்படுத்தும் செயலாகும். நடைமுறையில் தங்கள் வீட்டுசுவரில் காந்தி முதல் எம்.ஜி.ஆர் வரை படமாக தொங்கவிட்டுக்கொண்டும் ‘வடிவேலு’வின் பேச்சு நடையை ஒப்புவித்துக்கொண்டும்,
மலையக தமிழரான முரளிதரன் பந்து வீசும்போது கூட அதற்கு டெண்டுல்கர் சிக்ஸர் அடிக்கவேண்டும் என ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களை இந்தியா அடையாளம் காணாமல் இருப்பது துரதிஸ்டமே.
இந்தியாவில் மலையக தமிழர்கள் இன்றும் ‘அகதியாக’ வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களெனில், இலங்கையில் எமக்கு குடியுரிமை கிடைக்கவேண்டும் என வலியுறுத்துவீர்களெனில் அதுவே நீங்கள் எமக்கு தரும் தார்மீக ஆதரவாகும். 

இந்தியா மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் எதிர்பார்ப்பும் இதுவேயாகும்.

ஒட்டுமொத்தமாக மலையக மக்களின் வாழ்க்கை தரம் உயர என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

இயல்பான போக்கில் அயராத முயற்சியினால் இந்த மக்கள் தமது வாழக்ககைத் தரத்தை உயர்த்த முயற்சித்துக்கொண்டுதான இருக்கிறார்கள். இப்போது கணிசமான அளவில் படைப்பாளிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்,ஒரு சில பேராசியர்கள் என விரிந்து செல்கிறார்கள். இலக்கியதுறையில் காத்திரமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளனர். ஆனால் அரசியல் ரீதியாக காத்திரமான தலைமைத்துவத்துக்கான தேவை நிலவுகிறது. அரசியல் ரீதியாக பலம் உறுதிப்படுத்தப்படுகின்றபோது வாழ்க்கைத்தரம் உயர வாயப்புகள் இருக்கின்றன.
அதற்கு ‘குடியுரிமை’ என்கிற பிரகடனம் இன்றியமையாதது. இல்லாத பட்சத்தில் இந்த வளர்ச்சி இரட்டிப்பாக இன்னும் இருநு}று ஆண்டுகள் தேவைப்படலாம்.

சந்திப்பு: சேவியர்

நண்பர் நிர்ஷனின் அனுமதியுடன் அவர் வலைப்பூவிலிருந்து இந்த நேர்க்காணல் இங்கே பதியப் பட்டிருக்கிறது.

Saturday, 25 October 2008

ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?

பரபரப்பான அல்லது சர்ச்சைக்குரிய விவகாரங்களை தவிர்க்கவே விரும்பினாலும் இது உணர்வுபூர்வமானதும் முக்கியமானதுமான விவகாரம் என்பதால் இந்த பதிவு.

ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியா எந்த வகையில் பங்காற்றி தீர்வுக்கு வழி செய்ய முடியும்? நாம் இங்கு ராஜினாமா செய்கிறோம், மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறோம்..இன்னும் பல வழிகளில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் சிங்கள இனவெறி அரசுக்கு. ஆனால் அது ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையில் உதவும்? இதைப் பார்த்து சிங்கள அரசு திருந்திவிடுமா? தமிழர்கள் மீதான தாக்குதலைக் கைவிடுமா?

இந்தியா அவர்களிடன் கோரிக்கைத் தான் வைக்க முடியும். கட்டளை இட முடியாது. அந்த கோரிக்கையை அவர்கள் காதில் வாங்கிக்கொள்வது போல் தெரியவில்லை. பிறகு இந்தியா என்ன செய்ய வேண்டும்? ராணுவத்தை அனுப்பி பங்களாதேஷ் போல ஈழத் தமிழகம் மலர செய்ய வேண்டுமா? அப்படி அனுப்பப் படும் ராணுவத்தை ஏற்கும் மனநிலையில் ஈழத் தமிழர்கள் இருக்கிறார்களா? நாம் கடந்த காலத்தை பற்றி யோசித்து ராணுவத்தை அனுப்பத் தயங்குவது போல் ஈழ மக்களும் தயங்கமாட்டார்களா?

இலங்கை ராணுவத்திற்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்தலாம். ஆனால் சீனாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவும் இப்போதும் ஆயுதம் குடுக்கிறார்களே. நாம் நிறுத்தினாலும் அவர்கள் குடுப்பார்களே. அந்த ஆயுதங்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப் படாதா?.. இந்தியா ராணுவ உதவி வழங்குவதை நியாயப் படுத்தவில்லை. உடனே நிறுத்தினாலும் சிங்கள இனவெறி அரசுக்கு அதனால் எந்த இழப்பும் இல்லையே.

வேறு எந்த வகையில் தான் இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியும்.? நாம் இங்கு நடத்தும் போராட்டங்கள் எல்லாமே இலக்கே இல்லாமல் குருட்டுத் தனமாக வெறும் எதிர்ப்பு காட்டுவது என்ற வகையில் தான் இருக்கு. சரியான தீர்வை சொல்லி ஒருவரும் போராடவில்லை.யாரையும் திட்டாமல் நேர்மையாக உங்கள் கருத்த்துக்களை சொல்லுங்கள்.

இந்தியாவின் பங்களிப்பு எபப்டி இருக்க வேண்டும் என்பதில், குறிப்பாக ஈழத்து சகோதரர்களின் கருத்தை அறிய விரும்புகிறோம்.

இது நிச்சயம் பலருக்கும் ஒரு தெளிவை உண்டாக்கும்.
அனானி ஆப்ஷனும் திறந்துவிடுகிறேன்.
தனிமனித தாக்குதல்கள் வேண்டாம்.
ஈழத் தமிழ் மக்களுக்கு பயன் படும் வகையிலான கருத்துக்களை மட்டுமே சொல்லுங்க.

Tamiler This Week