இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comMonday, 29 June 2009
சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு” திருக்குறள் - 396
“மணற்கேணி- 2009”
சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி
இன்றைக்கு பதிவுலக்கு வெளியே பதிவுலகைப் பற்றி இருக்கும் ஒரு மறைமுக அறைகூவல், பதிவர்கள் எனப்படும் இணைய எழுத்தாளர்களால் ஆக்கப்பூர்வமாக எதுவும் எழுத முடியுமா என்பதே. முன்னோடி எழுத்தாளர்கள் முதல் பொதுத்தள ஊடகங்கள் வரை இந்தக் கேள்வியை மறைமுகமாக கேட்டுவருகின்றன மேலும் பதிவர்களின் எழுத்துத் திறன் பற்றி பொதுமக்களிடம் பேசத் தயங்குகின்றன.அது தவிர பொதுமக்களிடையே பதிவுலகம் பற்றிய அறிமுகங்கள் இல்லாததற்கு முதன்மைக் காரணி கணினி மற்றும் இணைய இணைப்பு அனைவரிடம் இல்லை என்பதே. இவை வெளிப்படையான காரணங்கள் என்றாலும், இணையத்தில் எழுதுகிறேன், இணைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று பிறரிடம் சொன்னால் அவர்கள் உடனடியாக ஐஆர்சி எனப்படும் இணைய உரையாடியில் வெட்டிப் பேச்சு பேசுவரோ என்றே நினைக்கிறார்கள்.
இணையத்தில் மிகப் பெரிய அளவிலான கருத்தாய்வுகள், விவாதங்கள் நடந்து வருவதும் வெளியில் பலருக்கும் தெரியவில்லை. இணையத்தில் வெளியிடப் பட்டக் கட்டுரைகள் இவை என்று பொதுமக்கள் முன்பு அத்தகைய ஆக்கங்களைக் கொண்டு செல்லும் முயற்சி பெரிய அளவில் மேற்கொள்ளப் படவில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது. பதிவுலகம் பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைத் தவிர இது குறையன்று.
பதிவுலகில் பலரும் மிகவும் சிறப்பாக எழுதுகிறார்கள், பல ஆண்டுகளாக எழுதி வருகிறார்கள், அவர்களின் எழுத்துகள் பொதுமக்கள் முன் கொண்டு செல்ல பொதுத்தள ஊடகங்களையே நாட வேண்டி இருக்கிறது, அத்தகைய ஊடகங்கள் வெளியிட்டால் அது தன் எழுத்துக்கான பரிசு என்று நினைத்து மகிழும் நிலையில் பதிவர்கள் இருக்கிறோம். ஒருவரது எழுத்து பரவலாக ஏற்கப் படுவது ஊடகங்களைக் சார்ந்தது அல்ல, அது முழுக்க முழுக்க ஒருவரின் எழுத்தின், கருத்தின், எழுத்தாழத்தின் தன்மையைச் சார்ந்தது என்பதை நம்மால் உறுதி செய்ய முடியும். அன்றாடம் எழுதுகிறோம், ஆழமான கட்டுரைகளை நம்மாலும் எழுத முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் நாம் சிறந்த எழுத்தாளர் என்கிற உண்மையை நாமே உணர்வோம். அத்தகைய நல்ல வாய்ப்புகளை சிங்கைப் பதிவர்களும், தமிழ்வெளி திரட்டியும் ஏற்படுத்திக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறது.
மணற்கேணி 2009
கிணறு வேண்டும் என எண்ணிய பிறகு வெறும் மணல் தான், ஆழமாக தோண்ட தோண்ட அதனுள் நீர் இருப்பது, சுரப்பதும் நமக்கு தெரியவருகிறது. நம் எழுத்துக்கள் வெறும் எண்ணங்களாலும், நடப்புகளாலும் எழுதப்படுவதைவிட ஒரு குறிக்கோள் அதாவது ஒரு தலைப்பின் கீழ் எண்ணங்களைக் குவித்து தகவல்களைத் திரட்டி சிறப்பான ஆக்கமாக மாற்றும் போது அது ஒரு படைப்பாகப் போற்றப்படும். பதிவர்களை ஊக்குவித்து, பரிசளித்து, பதிவர்களை மற்றும் ஒரு பரிணாம வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல, சிங்கைப் பதிவர்கள் எடுக்கும் சிறு முயற்சியின் முதல் வித்து மணற்கேணி - 2009.இந்த ஆண்டுக்கான மணற்கேணி - 2009 போட்டி சூலை 01, 2009 துவங்குகிறது. பதிவர்கள் தங்கள் கருத்தாக்கங்களை போட்டிப் பிரிவுகளுக்கான மின்னஞ்சல் முகவரிகளுக்கு ஆகச்டு 15, 2009 23:59:59 (தமிழக நேரம்)க்குள் அனுப்ப வேண்டும். யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். பதிவு வைத்திருப்பது கட்டாயம் இல்லை என்றாலும் இட்டீடு(விவாதம்) வேண்டி பதிவிடுவதை ஊக்குவிக்க விரும்புகிறோம். இயன்ற வரை தனித்தமிழில் ஆக்கங்களைத் தர முயலுங்கள். முனைப்பிற்கான முயற்சி இது. போட்டி ஆரம்பமாகும் தினத்திற்கு முன்போ அல்லது போட்டி கடைசி தினத்திற்கு பின்போ வரும் கருத்தாய்வுகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ள இயலாது, போட்டிக்கு அனுப்பும் கடைசி நாள் வரை போட்டி கருத்தாய்வு வலைப்பதிவுகளிலே அல்லது எந்த விதத்திலும் எங்கேயும் வெளியாகியிருக்க கூடாது, போட்டி விதிமுறைகள் சூலை 01,2009 அன்று வெளியிடப்படும்...
கருத்தாய்வு போட்டி மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது, ஒவ்வொரு பிரிவிலும் பல தலைப்புகளின் கீழ் நடைபெறுகிறது, இது தொடர்பான விவரங்களை போட்டி தலைப்புகள் என்ற சுட்டியின் கீழ் காணலாம். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒருவர் என மொத்தம் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்து ஒரு கிழமை(வாரம்) தங்கி சுற்றுபயணம் செய்யலாம்
இணைப்பு தர
மணற்கேணி 2009 பற்றிய விளம்பரத்தை உங்கள் தளங்களில் இட்டு இம்முயற்சியை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்ஹிஹி.. இந்தப் பதிவுக்கும் தமிழ்மணம்ல ஓட்டுப் போடுவீங்களாம்.. :)
Tuesday, 23 June 2009
வாழ்த்துங்கள்.
என் அன்பு சகோதரி மணோன்மணி மற்றும் மாப்பிள்ளை முத்தமிழ் அவர்களுக்கு நாளை ( ஜூன் 24, 2009) திருமணம் நடைபெற உள்ளது. மணோ எப்போவும் ரொம்ப ஸ்பெஷல் எனக்கு. சித்தப்பாகிட்ட சொல்றதுக்கு முன்னாடியே எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிடுவா. என்னை ரொம்ப மதிக்கும் ரொம்ப அப்பாவி தங்கச்சி. :)
மற்றொரு தங்கச்சி கண்ணகி( கலைஞர் வச்ச பேர்) மற்றும் பிரதிப்குமார் ஆகியோருக்கு 29-06-2009 அன்று திருமணம் நடைபெற உள்ளது. கண்ணகி என் தங்கச்சி என்பதை விட நல்ல தோழி என்பது தான் சரி. என் பர்சனல் டேட்டா எல்லாம் போட்டு வாங்கிடுவா. நான் தான் கொஞ்சம் உஷாரா இருக்கனும் இவகிட்ட..:)
உடன் பிறந்த சகோதரி இல்லையே என்ற கவலையை தீர்த்தவர்களில் முக்கியமானவர்கள். மணோ சென்னையில் இருந்த வரை அவ்வப்போது இந்த வலைப்பூவும் படிப்பாள். இங்கே தொடர்ந்து பின்னூட்டமிடம் பலரும் அவளுக்கு பரிச்சயமானவர்கள் தான். ஆகவே அனைவரும் என் சகோதரிகளை ஆசிர்வதிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
ஆசிர்வாதத்தை என் வங்கி கணக்கில் பெரும் தொகையாகவும் செலுத்தலாம். :)
ஜூன் 29ஆம் பிறந்தநாள் காணும் தோழி ராஜலெட்சுமிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
Monday, 22 June 2009
இணைய வரலாற்றில் முதன் முறையாக தமிழர்களுக்கு மட்டும்...
இணையவரலாற்றில் முதன் முறையாக தமிழர்களுக்காக....... விவரம் அறிய மேலே உள்ள படத்தை அமுக்குங்க.. அல்லது இங்கே... போங்க.. முந்துபவர்களுக்கு பரிசு கிடைக்க வாய்ப்பிருக்கு மக்கா.. :)
நான் என் பதிவுகளுக்கு தமிழ்மண ஓட்டு கேட்பதில்லை.. இப்போது முதல்முறையாக கேட்கிறேன். படிப்பவர்கள் அனைவரும் தமிழ்மண பட்டையில் ஒரு ஓட்டுப் போடுங்க. இந்த விவரம் பலரையும் சென்றடையனும். நன்றி.
Thursday, 18 June 2009
ரயிலுக்கு அழகிரி பஸ்ஸுகு லதா அதியமான்
சமீபத்துல டில்லியில் ரயிலை தவறவிட்டுத் தவித்த தமிழக மாணவர்கள் சிலருக்கு அண்ணன் அஞ்சா நெஞ்சன் அழகிரி உதவியது நினைவிருக்கலாம். அதே போல் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் லதா அதியமான் ஒரு உதவி செய்திருக்கிறார்.
ஒரு நாள் அவர் சென்னையில் இருக்கும் போது காலை 8 மணிக்கு ஒரு போன். பேசியவர் ஒரு பள்ளி மாணவி. ஊர் பெயர் மறந்துட்டேன்.
“ அக்கா நான் பஸ் ஸ்டேண்ட்ல நின்னிட்டிருக்கேன். ரொம்ப நேரமா பஸ் வரவே இல்ல. ஸ்கூலுக்கு டைம் ஆய்டிச்சி. பஸ் அனுப்ப சொல்லுங்கக்கா”
“ ஏன்மா பஸ் வரலையா? அங்க வேற யாரும் இல்லையா?”
“நானும் என் கூட படிக்கிற புள்ளைங்களும் தான்கா இருக்கோம். வேற யாரும் இல்ல. வேற ஒருத்தவங்க கிட்ட உங்க நம்பர் வாங்கி காயின் பூத்ல இருந்து பேசறேன்”
“அப்டியா.. சரி இரும்மா. நான் பேசறேன்”
உடனே அந்தப் பகுதி போக்குவரத்து மேலாளரை( வெங்கடேசனோ எதோ பெயர் சொன்னார்) தொடர்புக் கொண்டு காரணம் கேட்டிருக்கிறார் லதா அதியமான். பஸ் ப்ரேட் டவுன் ஆய்டிச்சின்னு சொன்னாராம். ப்ரேக் டவுன் ஆச்சின்னா என்ன வேற பஸ் அனுப்ப வேண்டியது தானே. அங்க ஸ்கூலுக்குப் போக முடியாம பசங்க எல்லாம் தவிச்சிட்டு இருக்காங்க. என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது. உடனே அந்த பகுதிக்கு பஸ் போயாகனும்னு சொல்லி இருக்காங்க. எம் எல் ஏ சொல்லி மறுக்க முடியுமா?. உடனே வேற பஸ் அனுப்பி இருக்காங்க.
மருதகாரய்ங்க கலக்கறாய்ங்கப்பு..... :)
தொகுதி மக்கள் தன்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்பதற்காக இதை சொன்னார்.
Wednesday, 10 June 2009
சாமி பாட்டுக் கேட்கலாம் வாங்க
பள்ளிப்படிப்பு முடியும் வரை தினமும் வீட்டில் இருந்து தான் சென்று வருவேன். கல்லூரியில் சேர்ந்த பின் தான் ஹாஸ்டல் வாசம். பள்ளிப் படிப்பு முடியும் வரை மார்கழி மாதம் வந்தாலே கடும் எரிச்சலாக இருக்கும். அந்த மாதம் முடியும் வரை காலையில் 5 மணிக்கு மேல் தூங்க முடியாது. கடுமையான குளிர் வேற இருக்கும். அதையும் தாண்டி பெரிய கம்பளி போர்த்தி ரொம்ப நேரம் தூங்கலாம். ஆனால் மார்கழி மாதம் மட்டும் அதெல்லாம் ஆகாது. அந்த மாதம் முழுதும் மாரியம்மன் கோவிலுக்கு போய் பொங்கல் வைப்பார்கள். காலை சிலர், மாலை சிலர் என முறை வைத்து பொங்கல் வைப்பார்கள். அந்த மாதம் முடியும் போது அனைவரும் பொங்கல் வைத்துவிடுவார்கள்.
அதனால் தினமும் காலை 4 அல்லது 5 மணிக்கெல்லாம் கோவில் கோபுரத்தில் கட்டியிருக்கும் ஒலிபெருக்கி அலற ஆரம்பித்துவிடும். சுமார் 5 கிமீ வரை கேட்குமளவுக்குகேட்கும்படி வைத்துவிடுவார்கள். அதுல சினிமா பாடல் போட மாட்டாங்க. மாட்டாங்க என்ன ? மாட்டோம்.. காலைல ரேடியோ செட்டுக்காரர் ஆன் பண்ணி விட்ருவார். அப்புறம் எங்க இஷ்டத்துக்கு பாட்டுப் போடுவோம். அந்த கேசட் பெட்டியில சாமி பாட்டு தவிர வேற ஒன்னும் இருக்காது. அப்போ எல்லாம் சாமி பாட்டுக் கேக்கறதுல விருப்பம் இருக்காதுன்னாலும் வேற வழி இல்ல. கேட்டுத் தான் ஆகனும். அவ்வப்போது பாடலை நிறுத்திவிட்டு மைக் ஆன் பண்ணி அன்று பொங்கல் வைக்க வேண்டியவர்களின் பெயரை சொல்லி சீக்கிறம் வர வேண்டும் என்றும் அன்று மாலை மற்றும் அடுத்த நாள் பொங்கல் வைக்கவேண்டியவர்கள் பெயரை சொல்லி அறிவிப்பும் செய்வோம். இதுக்கு பெரிய போட்டியே இருக்கும். ஹ்ம்ம்.. அதெல்லாம் இப்போ போயே போச்.. இப்போ எல்லாம் மார்கழி மாதமே யாருக்கும் நினைவி இருக்குதான்னு தெரியலை.
மார்கழி மாதம் மட்டும் இல்லை.. கோவில் திருவிழா எப்போ நடந்தாலும் இதே கதை தான். ஆகவே அந்தப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு வரிக்கு வரி நினைவில் இருக்கும். சினிமா பாடல் கூட 4 வரிகளுக்கு மேல் நினைவில் இருக்காது. விருப்பம் இல்லாமல் கேடிருந்தாலும் பின்னாளில் சாமி பாடல்கள் எல்லாம் ரொம்ப பிடித்துப் போய்விட்டது. சாமி கும்பிடுவதை நிறுத்திய பின்னும் கூட ரசிக்க முடிந்தது.
எல் ஆர் ஈஸ்வரி அவர்களின் மாரியம்மன் தொடர்பான பாடல்கள், டிஎம்எஸ்-ன் முருகன் பாடல்கள் மற்றும் ஐயப்பன் பாடல்கள் பெரும்பாலானவை வரிக்கு வரி பாட?! தெரியும். மார்கழி மாதம் பற்றி எழுத ஆரம்பித்தாம் 10 பதிவு எழுதலாம். காலையில் வாசல் பெருக்கி, சாணித் தண்ணீர் தெளித்து வெங்கசெங்கல் பொடியில் கோலம் போட்டு.........
இப்போ மேட்டர் அதுவல்லை..சமீபத்தில் ஒரு பதிவர் ஒரு பக்தி பதிவு எழுதி இருந்தார். அவர் எழுதும் அனைத்தும் பக்திமயமானது தான். பெயர் மறந்துவிட்டது. ராமலக்ஷ்மி அககாவுக்கு தெரியும். அவர் பதிவில் இந்தப் பாடல்கள் பற்றி படித்ததும் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். எனக்கு இந்த மாதிரி பாடல்கள் ரொம்ப பிடிக்கும் என்றும் அதற்கான சுட்டிகள் இருந்தால் கொடுங்கள் என்றும் கேட்டிருந்தேன். பின் நானும் thiraipaadal , imeem , last.fm , vodpod என எனக்குத் தெரிந்த தளங்களில் எல்லாம் தேடினேன். கூகுளிட்டும் பார்த்தேன். ஒன்னும் கிடைக்கலை. கடுப்பாகி விட்டுட்டேன்.
இதை எப்படியோ தெரிந்துக் கொண்ட என் பேவரிட் இசைத் தளமான thiraipaadal புதிதாக bhaktipaadal என்று ஒரு தளம் ஆரம்பித்திருக்கிறார்கள். ஏராளமான பக்திப் பாடல்கள் கொட்டிக்கிடக்கின்றன. திரைபாடல் தளத்தில் ரொம்ப பிடித்த விஷயமே அவர்கள் வகைப்படுத்தும் விதம் தான். அற்புதமாக இருக்கும். இசையும் தெளிவாகவும் தரமாகவும் இருக்கும். பக்திபாடல் தளத்தின் சென்றதும் ஈஸ்வரி அவர்கள் மற்றும் டி எம் எஸ் பாடல்களைத் தான் தான் கேட்டேன். என்ன ஆச்சர்யம்...!.. சிறு வயதில் கேட்டிருந்தாலும் அனைத்து வரிகளும் இன்னும் நினைவில் இருக்கு. கூடவே பாட?! முடிகிறது. அந்த அளவு மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. :)
டிஸ்கி: என்னை யாருக் காதலிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக காதலை வெறுத்தாலும் காதல் பாடல்கள் கேட்கப் பிடிக்காமலா இருக்கு? அதே போல் தான் இதுவும்.. கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் சாமி பாடல்கள் ரொம்பவே பிடிக்கும். கந்தசஷ்டிகவசத்துக்கு நான் அடிமை. :)
சாமி பாட்டு கேட்கும் ஆசை உள்ளவர்களுக்கு,
பக்திபாடல் இசைத்தளம் Baktipaadal.com
Monday, 8 June 2009
அன்பான வாக்காளப் பெருமக்களே..!
என் அன்பான வாக்காள பெருமக்களே..
Indiblogger.in நடத்தும் ஏப்ரல் மாத சிறந்த பதிவருக்கான போட்டியில் நானும் குதிச்சி இருக்கேன். Social Causes என்ற தலைப்பில் எனது 5 பதிவுகளை போட்டிக்கு சமர்ப்பித்திருக்கிறேன். வழக்கமாம ஆங்கில மற்றும் ஹிந்தி மொழிப் பதிவர்களே முந்தி செல்கிறார்கள். இந்த போட்டியில் ஒரு தமிழன் ( தேர்தல்னு வந்தாலே தமிழன் உணர்வு வந்துடும்ல ) வெல்ல ஓட்டுப் போடுங்க. நெறைய தமிழ் பதிவர்கள் indibloggerல் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சிலர் போட்டியிலும் கலந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் என் வாழ்த்துகள். வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள் என் பதிவுக்கு வாக்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி .. :)
இந்த மாதப் போட்டியில் 119 பேர் கலந்துக் கொண்டிருக்கிறார்கள். எனது பதிவை கண்டுபிடிக்க Find(ctrl+F) வசதியைக் கொண்டு Break the Rule என்று தேடினால் உடனே கிடைக்கும். அதன் வலது புறத்தில் ஒரு அமுக்கு .. அடுத்து வரும் பக்கத்தில் அதை உறுதிபடுத்தனும்.. அம்புட்டு தான்.
நான் சமர்ப்பித்திருக்கும் பதிவுகள்
http://podian.blogspot.com/2008/02/say-no-to-dirty-gold.html
http://podian.blogspot.com/2008/05/counterfeit-card.html
http://podian.blogspot.com/2008/06/blog-post_16.html
http://podian.blogspot.com/2009/04/blog-post_24.html
http://podian.blogspot.com/2008/02/blog-post_08.html
நீங்க இதை எல்லாம் இன்னொருக்கா படிச்சி கஷ்டப் படவேணாம். இண்டிப்ளாகர் அககவுண்ட் இருந்தா லாகின் பண்ணி வோட்டு மட்டும் போடுங்க. சில நொடிகள் வேலை தான்.
டிஸ்கி : இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் நடைபெறும். போட்டிக்கான தலைப்பும் விவாத களத்தில் பதிவர்களாலேயே தேர்ந்தெடுக்கப் படுகிறது. போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப் படும் தலைப்புக்கு தொடர்புடையதாக நீங்கள் 5 பதிவுகள் எழுதி இருக்க வேண்டும். அது எப்போது எழுதி இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் 5 பதிவுகளை சமர்ப்பித்ததும் நிர்வாகிகள் அதை பரிசீலிப்பார்கள். பின் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப் படும். இவை அனைத்திற்கும் நீங்கள் அந்த திரட்டியின் உறுப்பினராக இருப்பது மட்டுமே தகுதி. நீங்கள் போட்டிக்கு அனுப்பும் பதிவுகளைக் கொண்ட வலைப்பூவை அந்த திரட்டியில் இணைத்திருக்க வேண்டும். அம்புட்டு தான்.
Thursday, 4 June 2009
படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 5
இதில் இருக்கும் படத்தைப் பார்த்து பின்னூட்டத்தில் கவிதை சொல்லிட்டுப் போங்க. அடுத்த வாரம் புதன் வரை கவிதை சொல்லலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கவிதை சொல்லலாம். ஆனால் நிச்சயம் ஒருவருக்கு ஒரு கவிதை மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அந்த ஒரு கவிதை எது என்பதை ( ஒன்றுக்கு மேல் எழுதுபவர்கள்) கடைசி நாளுக்குள் குறிப்பிட்டு சொல்லிவிட வேண்டும். புதனுக்கு மேல் வரும் கவிதைகள் தனி வலைப்பூவில் பதியப் பட மாட்டாது. ஏனெனில் வியாழன் அன்று முந்தைய வாரத்துக்கான படமும் கவிதைகளும் பதிவிடப் படும்.
இங்கே பரிசுகளோ, கவிதையின் தரமோ அறிவிக்கப் பட மாட்டாது. இந்த பதிவின் பின்னூட்டத்தில் வரும் அத்தனைக் கவிதைகளும் படத்துடன் சேர்த்து ஒரு தனி வலைப்பூவில் சேமிக்கப் படும். அந்த வலைப்பூவும் அனைவரின் காட்சிக்கும் வைக்கப் படும். கவிதைகள் பற்றிய பின்னூட்டங்களோ கும்மிகளோ தாராளமாக அங்கே அரங்கேற்றலாம்.
தனி வலைப்பூவில் வெளியிட்ட பின் யாராவது கவிதைத் திறமைசாலிகள் (எனக்குத் பழக்கமானவர்கள் : அனுஜன்யா, ஜ்யோவரம் சுந்தர், வடகரைவேலன் அண்ணாச்சி, பரிசல் போன்றவர்கள் மற்றும் பலர் ) தனிப் பட்ட முறையில் பின்னூட்டத்தில் சிறந்த கவிதைகளை பட்டியலிடலாம். சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுப்பவர்களும் படத்திற்கு கவிதை எழுதலாம். ஆனால் தேர்வு செய்யும் போது அவர்கள் கவிதை தவிர்த்து பிறர் கவிதைகளை தேர்வு செய்யலாம். இது அவர்களின் தனிப் பட்ட முடிவு மற்றும் ரசனையாக இருக்கும். மிகச் சிறப்பாக கவிதை எழுதுபவர்களுக்கு மிகச் சிறந்தவர்களால் அங்கீகாரம் கிடைத்தால் அதைவிட பெருமை என்ன இருக்க முடியும்?. :)
இங்கே முடிந்த வரை கும்மி அடிக்காமல்( இந்த பதிவுகளுக்கு மட்டும்) இருக்க பணிவுடன் வேண்டுகிறேன்.
டிஸ்கி : யார் வேண்டுமானாலும் இதற்கு படம் அனுப்பலாம். கவிதைகள் எழுத ஏற்றது போல் வரைந்தும் அனுப்பலாம். படங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : blogsking@gmail.com .
இந்த வாரப் படம்..
முந்தையக் கவிதைகள் படிக்க : பேசும் கவிதைகள்.
கோவை பதிவர் சந்திப்பு அறிவிப்பு
வணக்கம் மக ஜனங்களே..!
வருகிற 11ஆம் தேதி(11.06.2009) வியாழன் அன்று நம் நண்பன் அதிஷாவின் தங்கைக்கு திருமணம் இனிதாய் நடைபெறவுள்ளது. அதற்காக அவர் அனைத்துப் பதிவர்களையும் அழைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அன்று கோவையில் ஒரு பதிவர் சந்திப்பு வைத்துக்கொள்ளலாம் என ஸ்வாமி ஓம்கார் தெரிவித்துள்ளார். ஆர்எஸ் புரத்தில் இருக்கும் அவரது செண்டரின் மேல்மாடியில் சந்திப்பு வைத்துக்கொள்ளலாம் என சொல்லி இருக்கிறார். அதிஷாவின் தங்கைத் திருமணத்திற்கு வரும் பதிவர்களும் கோவை திருப்பூர் ஈரோடு பதிவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளவேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.
கோவை திருப்பூர் ஈரோடு பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் பதிவெழுதுகிறார்கள். இதில் பாதிப் பேர் அறிமுகம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
இது சம்பந்தமாக அனைவரின் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது.
Tuesday, 2 June 2009
சிறுக(வி)தை
கோழிக்கூப்ட வந்துட்டார்..
தலைவர் ஊட்ல
மாரியாத்தா உடுத்த
புதுத்துணி தயாராய்,,
கைகூப்பி வணங்கி
ஆடைகளை கண்ணில் ஒத்தி
உற்சாகமாய் இருந்தார்
தேசிங்கன் பூசேரி..
ஆத்தாவுக்கு அணிவிக்கும்
துணிகளை தொட்டதே
பல ஜென்ம பாக்கியமாம்..
புத்தாடை, புது நகை,
கையில் புதுக் கத்தி..
ஆத்தா அழகாய் ஜொளித்தாள்
“என்னடா தேசிங்கா..
என்ன சொல்றா எங்கம்மா?”
மாரியாத்தா மகனாய்
மாறினார் தலைவர்..
“ அவளுக்கென்ன சாமி
இப்போதான் பொறந்தவ மாறி
புது துணி புது நகைல
ஜெகஜோதியா இருக்காளே”
ஆத்தாளுக்கு மகனும்
பூசேரிக்கு சாமி தான்..
துணி எடுத்து வச்சிருக்கேன்
ஊட்ல வாங்கினு போடான்னாரு சாமி.
பூசேரிய பாத்ததும்
கைப்பையை கொடுத்தா
எசமானியம்மா..
நல்ல அழகான துணிப்பா
உனுக்குன்னு தான் குடுக்கறாரு மொதலாளி
அவளுக்கு புருஷந்தான் ஊருக்கே மொதலாளி
இந்த வெருஷ தட்சணையை
பூரிப்பா வாங்கினு
ஊடு பாத்து கட்டினான் நடய.
” இந்தாப்பா பூசேரி..”
போகவிட்டு பொறவு கூப்பிட்டா எசமானியம்மா
”பார்த்துட்டேனாத்தா
இந்த வெருஷம் எடக்கைல தான் கிழிஞ்சிருக்கு
சீல ஊசில தெச்சிக்கிறேன்..”
Monday, 1 June 2009
இருவத்தி நாலு வரி ஹைக்கூ
வெறகு இட்டாந்து
அடுப்ப பத்தவச்சி
ஒல வச்சி
அரிசி போட்டு
பொங்க வச்சி
கஞ்சி வடிச்சி
அதை குடிச்சிப் பாத்தா
உப்பு செத்த கூடவோ?
சோத்த போட்டு
கொழம்பு ஊத்தி
கொழய பெசஞ்சி
உருண்ட புடிச்சி
உள்ள விட்டா
காரம் கொஞ்சம் தூக்கலோ?
ஊர சுத்திட்டு
ஊட்டுக்கு வந்து
பொட்டிய தொறந்து
லாகின் பண்ணி
லின்கு பார்த்து
கவுஜ படிச்சா
பைத்தியம் முத்திப் போச்சோ?
எண்ணிப் பாருங்க
இதுதான்
இருவத்தி நாலு வரி ஹைக்கூ..
இதை, திரிஷா விடியோ புகழ் அதிஷாவுக்கு சமர்ப்பிக்கிறேன்