இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Monday, 18 August, 2008

சோறு திங்கத் தெரியுதுல.. அப்போ இதையும் தெரிஞ்சிக்கோங்க

கடந்த பொங்கலுக்கு எங்க சித்தப்பா ஆதித்யனுக்கும் இனியாவுக்கும் ( வலது பக்க போட்டோல இருக்காங்க பாருங்க ) இது நெல்லு, இது கரும்பு, இது மஞ்சள்னு (இங்கிலிபீச்ல தான்) சொல்லிகிட்டு வந்தாரு. (அந்த குட்டிபசங்க பொறந்து வளர்ந்துட்டு இருக்கிறது சென்னைல தான். பண்டிகைகளுக்கு மட்டுமே எங்க வீட்டுக்கு வருவாங்க.).
அப்போ எங்கப்பா சொன்னாரு " இவங்களுக்கு அதிர்ஷடம் இருக்குடா.. இத எல்லாம் நேர்ல பாக்கிற குடுப்பனையாச்சும் இருக்கு. இவங்க பசங்களுக்கு இதை எல்லாம் இவங்க எதுனா மியூசியத்துல தான் காமிப்பாங்க".. விவசாயத்தின் நிலை இது தான். :(

அப்போ இருந்து ஒவ்வொரு மாதமும் ஊருக்கு போகும் போது தொட்டத்துல இருக்கிற பயிர்களை படமா புடிச்சி தள்றேன். :))... அதுல இருந்து ஒரு பாடம்... :)

எல்லோரும் அரிசிசோறு சாப்பிடறிங்களே.. அந்த அரிசி எபப்டி விளையுதுனு தெரியுமா?. கிராமத்து மக்களுக்கு நல்லா தெரியும். நகரத்திலேயே பிறந்த வளர்ந்தவர்களுக்கு?.. தெரியாது இல்ல.. ;).. இதோ இப்போ தெரிஞ்சிக்கலாம்.:)

முதலில் எவ்வளவு பரப்பளவில் நெல் பயிரவேண்டும் என்பதை முடிவு செய்துக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கு தேவையான விதை நெல்லை எடுத்து ஒரு கோணிப்பையில் போட்டு அதை தண்ணீர் தொட்டியில் ஊற வைக்கவேண்டும். ஊற வைத்த சில தினங்களில் அந்த நெல்மணிகள் முளைவிட ஆரம்பிக்கும். நெல்லை ஊறவைத்தவுடன் அதை விதைப்பதற்கு தேவையான அளவில் நிலத்தை உழுது அதை சேறாக்கி சேறை சமன்படுத்தி தயாராய் வைக்க வேண்டும்...

இந்த படத்தில் சாதாரனமாக உழுகிறார். இதே வயலில் நன்றாக நீர் நிரப்பி உழுதால் அந்த வயல் சேறாகி விடும். அதற்கு "ஜாடை" வைப்பது என்று சொல்வோம். நாங்க எல்லாம் இதில் தான் ஏர் ஓட்டக் கற்றுக்கொள்வோம். ஏன்னா ஜாடை வைப்பதில் வயலை நன்றாக சேறாக வேண்டும் என்பது தான் நோக்கம். அதில் சீராக ஏர் ஓட்ட( உழுதல்) வேண்டும் என்று அவசியம் இல்லை. முதலில் கற்றுகொள்ளும் போது நேராக உழ முடியாது. கலப்பையின் கைப்பிடிக்கு "மோழி" என்று பெயர். மோழியை சரியாக பிடிக்க வில்லை என்றால் நேராக உழ முடியாது. எருதின் கால்கள் சேதமாகவும் வாய்ப்பு இருக்கு. முதலில் ஒரு அனுபவசாலியுடன் சேர்ந்து மோழியை பிடித்து தான் பழக வேண்டும். நெல் பயிர் தவிர மற்ற பயிர்கள் அனைத்திற்கும் நேராக உழ வேண்டும். அதில் பாத்தி கட்டுதல் , வாய்க்கால் போடுதல் என சில வேலைகள் இருக்கும்.
( ஏர் உழுவதற்கு பொதுவாக எருதுகள் தான் பயன்படுத்துவார்கள். இப்போது எருதுகள் பார்ப்பது அரிதாகிவிட்டது. மேலே உள்ள படத்தில் இருப்பது எருதுகள் அல்ல. பசுமாடுகள். பசுமாடுகளுக்கு எருதுகள் போல் வலிமை கிடையாது. இப்போது எருதுகள் இல்லாததால் பசுமாடுகள் பயன்படுத்துகிறார்கள். பசுமாடுகளை பழக்கப் படுத்துவது படு சிரமமான காரியம். இப்போது 99% ட்ராக்டர்கள் தான் உழுவதற்கு பயன்படுத்துகிறார்கள்.).... ச்சோ..ச்சோ என்றால் இடது எருதும், பா..பா என்றால் வலது எருதும் நமக்கு கட்டுபடும். :))... இதற்கு சில வாய் சுழிப்பு மூலம் வரும் ஓசைகளும் இருக்கு. :)).. எல்லாம் ஒரே பவாய் போட்டால் பதிவு பெரிதாகிவிடும். தனி பதிவாய் போடுகிறேன்.


(நெல் விதைத்தான் இப்படி தான் அடர்த்தியாக வளரும்.)
நெல்மணிகள் முளைவிட்ட உடன் அவைகளை எடுத்து சேறாக்கிய வயலில் விதைக்க வேண்டும். அடர்த்தியாக விதைக்க வேண்டும். பெரும்பாலும் விதை நெல் சரியான அளவில் இருக்கும். சில சமயங்களில் கொஞ்சம் மிச்சமாகி விடும். அதை பரவலாக அந்த வயலிலேயே தூவி விடலாம். அதற்கு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 20 முதல் 25 நாட்களில் நன்றாக நெல் பயிர் வளர்ந்துவிடும். விதைபயிர் வளர்ந்துக் கொண்டு இருக்கும் போதே அந்த பயிர் நடுவதற்கு தேவையான பரப்பளவில் ஜாடை வைக்க வேண்டும். அதாவது வயலில் நீர் நிரப்பி, அதில் எருது அல்லது ட்ராக்டர் ( இதற்கு இரும்பினால் ஆன உயரமான சக்கரங்கள் ட்ராக்டரின் பின் சக்கரமாக பயன்படுத்த வேண்டும்) மூலம் உழுது நங்உ சேறாக்க வேண்டும். அதில் "எரு"( மக்கிய சாணம்), சில வகை இழை தலைகள் போட்டு அதன் மீது மீண்டும் ட்ராக்டர் மூலம் நசுங்க வைத்து சேறுடன் கலக்க செய்ய வேண்டும்.

அது முடிந்ததும் வயல் ஓரத்தில் இருக்கும் வரப்பை கேக் வெட்டுவதை போல மண்வெட்டியால் வெட்டியால் வெட்டி சரி செய்ய வேண்டும். வரப்பு தகறாரு கேள்வி பட்டிருப்பீங்க இல்ல. அது இதனால் தான் ஆரம்பிக்கும். :))... ஒவ்வொரு முறை வெரப்பை வெட்டும் போதும் அதன் தடினன் குறந்துக் கொண்டே வரும். அதனை ஒட்டிய வயலுக்கு சொந்த காரர் அவர் பகுதியில் வெட்டிக் கொண்டே இருப்பார். இந்த பக்கம் இருப்பவர் இவர் வசதிக்கு வெட்டி கொண்டே வருவார். ஒரு குறிபிட்ட சாகுபடிக்கு பிறகு வரப்பு மிகக் குறுகியதாகிவிடும். அதன் மீது நடப்பதற்கு கூட இடமில்லாமல் போய்விடும். அப்போது தான் வரப்பு தகறாரு வரும். :P... எங்க ஊரில் மண்வெட்டிக்கு "சனுக்கை" என்று பெயர். வரப்பு வெட்டுவதற்கு "அண்டை வெட்டுதல் அல்லது அண்டை கழித்தல்" என்று பெயர்.

பிறகு ஜாடையை "பரம்பு" ( T யை தலைகீழாக கவிழ்த்த மாதிரி ஒரு கருவி. மரத்தால் ஆனது) கொண்டு எருது அல்லது ட்ராக்டரில் இணைத்து சேறை சமன் படுத்த வேண்டும். மேடு பள்ளாம் இல்லாமல் செய்ய வேண்டும். அப்போது தான் நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும்.

பிறகு முதலில் விதைத்து பயிரான நெல் பயிர்களை பிடுங்கி அதை சிறு சிறு கத்தையாக கட்ட வேண்டும். அதை கட்டுவதற்கு வாழை நார் உபயோகிப்போம். கத்தையாக கட்டிய இந்த பயிர்களை கொண்டு சென்று பயிர் நடுவதற்காக உருவாக்கிய வயல்களில் சீரான இடைவெளியில் வீசிவிட வேண்டும். பிறகு ஆட்கள்( பெரும்பாலும் பெண்கள், ஆர்வக் கோளாரில் சில சமயங்களில் நானும்:) அந்த ஜாடையில் இறங்கி ஆளுக்கு ஒன்று அல்லது ஒன்னரை மீட்டர் இடைவெளியில் இடம் பிடித்துக் கொண்டு பயிர் நட ஆரம்பிப்பார்கள். பயிர் நடும் முறை கிணற்று பாசனம் செய்யும் இடங்களில் ஒரு மாதிரியும் ஆற்று பாசனங்கள் இருக்கும் இடங்களில் ஒரு மாதிரியும் இருக்கும். எங்க பகுதியில் கிணற்று பாசனம் மட்டுமே . ஆகவே அடர்த்தியாக நடுவார்கள். ஆற்று பாசனம் இருக்கும் இடங்களில் அதிக இடைவெளியில் நடுவார்கள். பரிர் நடும் போது காலால் ஏற்படும் குழிகளை கைய்யால் சமன் படுத்திக் கொண்டே வருவார்கள். இல்லை எனில் அந்த குழிகளுக்கும் சேர்த்து தேவை இல்லாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் பற்றாக் குறை காலங்களில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பயிர் சற்று வளரும் வரை மிதமான அளவே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மழை வந்து விட்டால் வயல் முழுதும் நிரம்பிவிடும். அப்போது வரப்பில் சிறிய உடைப்பு உண்டாக்கி தேவையில்லாத தண்னீரை வெளியேற்ற வேண்டும். இல்லை எனில் பயிர் முழுதும் நீரில் மூழ்கி சூரிய ஒளி இல்லாமல் அழுகி விடும். அதாவது செத்துவிடும்.

வயலில் பயிர் நட்டு 40 அல்லது 45 நாட்களில் இந்த படத்தில் உள்ளது போல் வளர்ந்திருக்கும். இந்த கால கடங்களில் பயிரை பூச்சிகள் தாக்கும். எனவே பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்க வேண்டும். அவ்வப்போது யூரியா, உரம் போன்றவற்றை இட வேண்டும். பூச்சிகொல்லி மருந்தடிக்கும் முறை பற்றி தனி பதிவு போடுகிறேன்.
இந்த படத்தில் வெள்ளையாக தெரிவது ட்யூப்லைட்டுகள். கொக்குகளிடம் இருந்து பயிரை காக்க இந்த தந்திரம். வெயிலின் இது மின்னுவதால் அவைகள் பயத்தில் வராது. இல்லை என்றால் பெரும் படைகளாக வந்து பயிரை மிதித்து நாசம் செய்துவிடும். நெல் கதிர்கள் உறுவாக ஆரம்பித்ததும் குருவிகளின் வேட்டையிலிருந்து காக்க வயல்களின் குறுக்கே கயிறுகள் கட்டி அதில் சிரு சிறு மணிகள் தொங்க விடுவோம். குருவிகள் அந்த கயிறின் மீது அமர்ந்தால் கயிறின் அசைவில் அந்த மணி ஒலி எழுப்பும். உடனே குருவிகள் பறந்துவிடும்.

மணிகளுக்கு பதில் ஆடியோ கேசட்டுகளில் உள்ள டேப்பை எடுத்து வயல்களின் குறுக்கே கட்டிவிடுவோம். காற்றில் அவைகளில் வித்தியாசமான பயமுருத்தும் வகையிலான ஒலி கிடைக்கும். இதனால் குருவிகள் வராது. இப்படியும் நெல்லை காக்கலாம். இன்னும் சிலர் பெரிய தகர டின்களை வைத்து குருவிகள் வரும் போது அதை பலமாக அடித்து அவற்றை விரட்டுவார்கள். "கவட்டை" எனும் கல் எறியும் கருவி மூலமும் குருவி விரட்டலாம்.

கவட்டை - -----( )------ கைகள் இரண்டையும் கோர்த்துக்கொண்டு உள்ளங்கையை குவித்துக் கொண்டால் ஒரு ஷேப் கிடைக்கும்ல.. அதன் இரண்டு முனைகளையும் கயிற்றால் நம் கையின் நீளத்துக்கு கட்டிகொண்டால் எப்படி இருக்குமோ அது தான் கவட்டை. உள்ளங்கை போன்ற பகுதியில் சில சிறு கற்களை வைத்து கயிற்றின் 2 முனைகளையும் ஒரு கைய்யில் பிடித்துக் கொண்டு வேகமாக சுழற்றி பின் ஒரு முனையை மற்றும் விட வேண்டும். அதில் இருக்கும் கற்கள் அனைத்தும் பல திசைகளில் தூரமாக சென்று விழும். இதனால் குருவிகள் பறந்துவிடும்.

60 முதல் 70 நாட்களுக்குள் இந்த நிலை வந்துவிடும். நெல்மணிகள் பழுப்பு நிறம் வர ஆரம்பித்துவிடும். 3 மாதம் முடியும் போது அருவடைக்கு தயாராய் இருக்கும். பல் சக்கறம் போன்ற அமைப்புடன் இருக்கும் சிறு சிரு அரிவாள்கள் கொண்டு தரையிலிருந்து நான்கு அல்லது 5 அங்குல உயரத்தில் பயிர்களை அறுக்க வேண்டும். கதிர் அறுப்பதற்காகவே ஸ்பெஷலாக சாணை பிடிப்பார்கள். அப்போது தான் ஒரே வீச்சில் அறுக்க முடியும். பயிர் நடுவதற்கு எப்படி சீரான இடைவெளியில் ஆட்கள் நடுவார்களோ அதே மாதிரி தான் இதையும் செய்வார்கள். அறுவடைக்கு தயாராய் இருக்கும் நெல் பயிர் "தாள்" என்று அழைக்கப் படும். அவைகளை அறுத்து கத்தைகளாக கட்டுவது "சுமை" கட்டுவது என்று சொல்வோம். ஒவ்வொரு வயலிலும் எத்தனை சுமை என்பது எண்ணப் படும் . அதை வைத்தே எத்தனை மூட்டை நெல் கிடைக்கும் என்பதை கணிக்கலாம். பிறகு இந்த சுமைகளை மாட்டு வண்டியில் அல்லது ட்ராக்டரில் ஏற்றி களத்திற்கு கொண்டு செல்வோம். களம் என்பது கதிர் அடிகக்வும், தாணியங்களை உலர்த்தவும் ( காய வைக்க) பிரத்தியேகமாக தயாரிக்கப் படும் இடம்.
இது கதிர் அறுத்த நெல் வயல்.

கதிர் அடிக்கும் முறை -
பழையது : சுமைகளை பிரித்து நெல்மணிகள் மேல்நோக்கி இருக்குமாறு களத்தில் வட்ட வடிவில் அடுக்க வேண்டும். அதன் மீது 2 அல்லது 3 ஜோடி எருதுகளைக் கொண்டு மிதிக்க வைக்க வேண்டும் . இதன் மூலம் 95 சதவீத நெல் மணிகள் உதிர்ந்துவிடும். மிச்சம் மீதி இருப்பதை மனித சக்தி மூலம் பிரித்தெடுக்கனும். அதற்கு ஆடுகள் அடைக்க பயன்படும் பட்டிகள் கட்ட பயன்படுத்தப் படும் பிளந்த மூங்கில்களால் பின்னப் பட்ட "படல்கள்" பயன்படுத்தப் படும். அந்த படல்களை 2 ஊன்றுகோல்கள் மூல சாய்வாக நிற்க வைத்து அதன் மீது நெற்பயிர்களை சிறு சிறு கத்தைகளாக எடுத்து ஓங்கி அடிக்க வேண்டும். இப்போது மிச்சம் மீதி ஒட்டி இருந்த நெல்மணிகளும் உதிர்ந்துவிடும். பிறகு வைக்கோலை மட்டும் எடுத்து காலி வயல்கள் அல்லது காலி இடத்தில் பரவலாக போட்டு உலர்த்த வேண்டும். பிறகு கீழே இருக்கும் நெல்களை முறங்களில் அள்ளி உயரமாக பிடித்துக் கொண்டு லேசாக அசைத்தவாறே நெல்மணிகள் கீழே விழுமாறு செய்ய வேண்டும். இதற்கு லேசான காற்றாவது வீச வேண்டும். அப்போது தான் பதர்கள் காற்றில் பறந்து சற்று தூரமாக விழும். நல்ல மணிகள் மட்டும் கீழே ஓரிடத்தில் விழும். இதை பலர் செய்ய வேண்டும். நெல்லை அள்ளி வேகமாக வீசுவதன் மூலமும் இதை செய்யலாம். பிறகு அவற்றை கோணிப்பைகளில் கட்டி சேமிக்க வேண்டியது தான். நெல்லின் அளவை பொறுத்து விற்பதும் வீட்டிலேயே வைபப்தும் முடிவு செய்யப் படும்.

புதிய முறை : கதிர் அடிக்கும் இயந்திரத்தின் மெல் பகுதியில் நெல்பயிரை எந்திரத்திர்குல் செலுத்தும் பகுதி இருக்கும். அந்த இடத்தில் உட்கார்ந்துக் கொண்டு நெல்மனிகள் முன்புறம் இருக்கும் வகையில் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே செலுத்த வேண்டும். கீழே இருந்து ஒருவர் சுமைகளை எடுத்துக் கொடுக்க வேண்டும். அருகில் இருந்து ஒருவர் சுமைகளை கட்டி இருக்கும் நார்களை அறுத்து விடுவார். உள்ளே சென்ற நெல்பயிர் கதிர்கள் தனியாக எந்திரத்தின் பக்கவாட்டில் உள்ள சிறு பகுதிவழியாக நெல்மணிகளாகவும் பின்புறம் உள்ள பெரிய பகுதி வழியாக வைக்கோலும் பதர்களும் வரும். நெல்மணிகளை சிறு சிறு பாத்திரங்கள் கொண்டு சேமித்து அவற்றை கோணிப் பையில் அல்லது வீட்டின் ஒரு பகுதியில் போட வேண்டும். பின் பகுதியில் ஒரு கயிற்றுக் கட்டில் இனைக்கப் பட்டிருக்கும். அதன் மீது தான் வைக்கோல் வெளியேறும். அங்கே 2 பக்கமும் 2 பேர் நின்றுகொண்டு வரும் வைக்கோலை அலசி அலசி வீசுவார்கள். ஏனென்றால் வைக்கோலுடன் ஒட்டிகொண்டு வரும் நெல்களை மற்றும் ம்பதர்கள் கயிற்றுக் கட்டிலுக்கு கீல் விழச் செய்வது தான் நோக்கம். பதர்கள் மாடுகளுக்கு தவிடு அரைக்க உதவும். இனி யாரையும் பதர்களே என திட்டாதிர்கள். பதர்களும் பயன்படும். :) இந்த வகையில் கதிர் அடிக்க .. சுமைகளை கொடுக்க ஒருவர், அவற்றின் கட்டுகளை அறுக்க ஒருவர், சுமைகளை உள்ளே அனுப்ப ஒருவர், நெல்மணிகளை அள்ள ஒருவர், கோனிப்பை பிடிக்க ஒருவர், வைகோலை அலச இருவர், அலசிய வைக்கோலை காலி இடங்களுக்கு இழுத்து செல்ல இருவர் ( கை வலி உயிர் போகும்), அவற்றை பரவலாக பரப்ப ஒருவர் அல்லது இருவர் என குறைந்தது 10 பேர் வெண்டும். இற்கு கூலிக்கு ஆள் வருவது அரிது. ரொம்பவே கொடுமையான காரியம் இது. எனவே எங்களுக்கு இந்த வேலைக்கு வரவங்களுக்கு , அவங்க கதிர் அடிக்கும் போது நான் போய் செய்ய வேண்டும். இதே போல் ஷேர் பண்ணிப்போம். இதர்கு "மொய்" ஆள் என்று பெயர் :).அதாவது பரஸ்பர உதவி. இந்த மொய் ஆள் மேட்டர் எல்லா தோட்ட வேலைகளிலும் இருக்கும்.

பழைய முறையோ புதிய முறையோ... எதுவயினும் வெயில் அடிக்கும் போது செய்ய மாட்டோம். இரவிலும் இளங்காலை வேளையிலுமே செய்வோம். இது உடலை கிழிக்கும் செயல் என்பதால் வெயிலில் செய்தால் எரிச்சல் தாங்க முடியாது. இதை முடித்தவுடன் குளிர்ந்த நீரில் கண்டிப்பாக குளிக்க வேண்டும். அது கடுமையான குளிர்காலமாக இருப்பினும். இரவு 1 மணி 2 மணி வரையிலும் கூட இதை செய்ய வேண்டி இருக்கும்.

... இப்போது பழைய முறை முற்றிலும் அழிந்துவிட்டது. புதிய முறை மட்டுமே இருக்கு...

அப்பாலிக்கா இன்னா... நெல்லை அரவை மில்களுக்கு கொண்டு போய் அரைத்து கிடைக்கும் அரிசியை நாமும் தவிடை மாடுகளும் பங்கு போட்டுக்க வேண்டியது தான். :))


குறிப்பு : இந்த பதிவில் சாகுபடி முறை ஓரளவுக்கு சரியாக இருந்தாலும் இதில் குறிபிட்டிருக்கும் வளர்ச்சி காலங்கள் ஒவ்வொரு ரகத்திர்கும் ஒரு மாதிரி மாறும். சில ரகங்கள் 3 மாதத்தில் மகசூல் குடுக்கும். சிலது 4 மாதம் சிலது 5 மாதம் என மாறுபடும். இப்போது நாற்று நட, கதிர் அறுக்க, கதிர் அடிக்க எல்லாவற்றும் எந்திரம் வந்தாச்சி.
................க்ளாஸ் ஓவர்.. எல்லாரும் ஊட்டுக்கு போங்கோ.. :))


பெரிய பதிவாதலால் வழக்கம் போல் எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும். :).. ஏர் ஓட்டும் முதல் படம் பக்கத்து வயலில் எடுத்தது. மற்ற்வை எங்க வயல்கள். இதில் விவரித்திருக்கும் அனைத்து வேலையும் செய்திருக்கிறேன். எல்லாம் என் அனுபவமே பழய முறை கதிர் அடித்தல் உட்பட. ஆனால் இவை எலலாம் விட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் கொஞ்சம் மங்கலான நினைவுகள் தான். அந்த மங்கலான நினைவும் மங்கி போவதற்கு முன் பிரதி எடுத்துவைக்கும் ஒரு சின்ன முயற்சியே இது. :)

....இதை 100வது பதிவாக போட நினைத்தேன். ஹ்ம்ம்ம்.. எங்கே விடறாங்க.. தேடி வந்து வம்பிழுத்து ஒரு கேவலமான பதிவை 100வது பதிவாக்கிட்டானுங்க. :(

40 Comments:

said...

விவசாய பதிவு என்பதால் ”பச்சையாக” எழுதி இருக்கு உங்கள் கிரியேட்டிவிட்டியை மெச்சினோம்.

said...

//முதலில் எவ்வளவு பரப்பளவில் நெல் பயிரவேண்டும் என்பதை முடிவு செய்துக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கு தேவையான விதை நெல்லை எடுத்து ஒரு கோணிப்பையில் போட்டு அதை தண்ணீர் தொட்டியில் ஊற வைக்கவேண்டும்.//

மாம்ஸ் என்ன இது ஏதோ சன் டீவியில் உடனடி போண்டா செய்வது எப்படி என்று சொல்வது போல் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க:)))

said...

//ஒரே பவாய் போட்டால் பதிவு பெரிதாகிவிடும். தனி பதிவாய் போடுகிறேன்.///

ஓ இப்ப பதிவு பெருசா இல்லைன்னு சொல்ல வருகிறீர்கள்:))

said...

உழவன் மகனை சந்திப்பதில் மகிழ்கிறேன்.
நானும் எல்லா வேலைகளையும் செஞ்ருக்கேன். ஆனா எங்க ஊர் ஆத்துபாசனம். வயலுக்கு பக்கத்துலயே களம் வைச்சுருவோம். அறுத்த கதிர தலையில தூக்கி வைச்சுக்கிட்டு களத்துக்கு கொண்டுவந்துருவாங்க.

முதல்ல கையால பலகை இல்லைன்னா கல்லுல அடிச்சு, அப்றம்தான் மாடு விட்டு மிதிக்க விடுவாங்க. இப்ப எல்லாம் கையால கட்டு அடிக்கிறது எங்க இருக்கு? எல்லாம் அறுத்து அடிச்சு கொடுக்கிற இயந்திரம் தான். வயல்லயே நெல்லு தனியா, வைக்கோல் தனியா பிரிச்சு எடுத்துருராங்க.

நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

உங்க வீட்ல சொன்ன மாதிரி இன்னும் கொஞ்ச நாள்ல நெல்ல எல்லாம் ம்யூஸியத்துலத்தான் புள்ளைங்களுக்கு காட்டணும். நாம சாப்பிடுறதுக்குத்தான் பீட்ஸா, பர்கர் எல்லாம் இருக்கும்ல, அதையும் அமெரிக்கால இருந்து இறக்குமதி செஞ்சுக்குவோம்ல.

said...

//மற்ற்வை எங்க வயல்கள். இதில் விவரித்திருக்கும் அனைத்து வேலையும் செய்திருக்கிறேன்.//

பதிவு கூறும் நீதி:

1)பதிவு ஆசிரியர் ஒரு மிராசு.

2) உடம்பில் இன்னும் இளமை இருக்கு.

3) கல்யாணத்துக்கு பெண் கொடுப்பவர்கள் கொடுக்கலாம்.

said...

மாம்ஸ் பதிவு அருமை! மேலே சொல்லி இருக்கும் கமெண்ட் சும்மா லோலாங்காட்டிங்கும்.

said...

சஞ்சய்,

உமது வலையுலக அரசியல் மீது எனக்கு விமர்சனம் இருந்தாலும் இந்தப் பதிவுக்காக தமிழ் உம்மை வாழ்த்தும். எனது உளமார்ந்த பாராட்டுகள். இப்படிப்பட்ட செய்திகளை/ வழிமுறைகளை ஆவணப் படுத்துவதிலேயெ மொழியின் வளம் அதிகரிக்கும், நிலைத்து நிற்கும். அது புரியாமல் ஆங்கிலம் மட்டுமே படி, இந்தி மட்டுமே படி எனக் கூவும் அறிவுக்கெட்ட மூதேவிகளை என்ன சொல்ல?

தொடர்ந்து எழுதுங்கள்.

said...

ஏதோ எங்கள திட்டி பதிவு போட்டுருக்கீங்கன்னு தான் வந்தேன். ஆனா, சூப்பரான பதிவு.

said...

// Indian said...
சஞ்சய்,

உமது வலையுலக அரசியல் மீது எனக்கு விமர்சனம் இருந்தாலும் //

நான் சொன்னப்ப ஏதோ விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைச்சிங்க..இப்பயாவது தெரிஞ்சுக்குங்க.. நீங்க வலையுலக அரசியல் வாதி...

ஒரு விவசாய பதிவுக்கு இப்படி டரியலா தலைப்பு வைக்கும் பொழுதே நீங்க பெரும் அரசியல்வாதி ஆகிட்டீங்கன்னு தெரியுதுங்கோ!!!

said...

நெல்லு மரம் எவ்வளோ உயரத்துக்கு வளரும் ?

said...

மாம்ஸ் அடுத்த முறை போட்டோ புடிக்க போவும் பொழுது நந்துவையும் அழைத்து போங்க சேற்றில் விழுந்து பிரண்டு போட்டோ எடுப்பார்:)

said...

குசும்பா நான் பாட்டுக்கு செவனேன்னுதானே இருக்கேன். என்ன ஏன் இங்க இழுக்கற?

said...

ஆஹா...உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் பதிவு...நானும் எல்லா வேலைகளும் செய்திருக்கிறேன் சஞ்சய்...காவேரி டெல்டா பகுதியில் ஆற்று பாசனத்தை நம்பியவர்களின் முடிவு தான் எங்களுக்கும்...நிலங்களை எல்லாம் ஏதோ வந்த வேலைக்கு விற்றுவிட்டு நகர்புறத்தில் குடியேறிவிட்டோம்...இன்றும் நாங்கள் வளர்த்த காளை மாடுகளும் வயல்வெளிகளும் கண் முன்னே நிழலாடுகின்றன!

said...
This comment has been removed by the author.
said...

எழுத்துப் பிழைகளைக் கவனிக்காமல் விட்டதால் முந்தைய பின்னூட்டத்தை அழித்து விட்டேன்.

அண்ணே! புதுக்கோட்டையில் எங்க வீட்டுக்குப் பின்னேயே எங்களுக்குச் சொந்தமா 4 ஏக்கர் நிலம் இருந்துச்சு.(இப்போ பிளாட் ஆயிருச்சு).சின்ன வயதில் எங்க வயலில் சின்னையா என்ற ஓருவர் வேலை செய்தார்.அவர் பர்மாவில இருந்து வந்தவர் ஆகையால் அவரை பர்மாக்கார் அய்யா என்று தான் அழைப்போம். அவரிடம் கெஞ்சி கலப்பை பிடித்து ஏர் ஓட்டி மகிழ்ந்தது உங்க பதிவப் பார்த்ததும் ஞாபகம் வந்துருச்சு.

said...

விவசாயத்தை பற்றியெல்லாம் நமக்கு தெரியாது... அதுவும் நெல் விவசாயம் ம்ஹூம்... பொறுமையா படிச்சி பார்க்கிறென். :)

said...

மிகவும் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் சஞ்சய்..!
மனதில் தோன்றுவதை மாறாமல் எழுதும் பழக்கத்தை மாற்றாமல் எழுதியதற்கு வாழ்த்துக்கள்!

உண்மையா...நான் இதுபோன்று எழுதணும்னு நினைச்சேன். நீங்க அனுபவப்பூர்வமா எழுதி...அழகா முந்திக்கிட்டீங்க!

நியாயமான , அழகான பதிவு..!
101தாங்க என்னிக்குமே சூப்பர்!

வாழ்த்துக்கள்..!

said...

ஸாரிபா!

103தான் சூப்பர்!

said...

மாம்ஸ் கலக்கீட்டீங்க!

said...

தலைப்பு பாத்து என்னடா எதோ ரவுசு பண்ணி இருப்பீங்களோ அப்படின்னு நினைச்சிகிட்டே வந்தேன். மிக அருமையான பதிவு.

said...

கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் இந்த அனைத்தையும், வாய்க்கா தகராறில் ஒருத்தன் இன்னொருவன் மண்டைல சணுக்கியால் போடுவது உட்பட நேரில் பார்க்கும் வாய்ப்பை பெற்றவன் என்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

said...

ஆனா பச்சை பச்சையா எழுதிட்டீங்க!!
:))

said...

மக்கள் தொலைகாட்சி டிவிடி வாங்கியிருக்கேன்னு முன்னாடி பதிவுல சொன்னப்பவே இப்படி ஒரு பதிவு வரும்னு எதிர்பார்ப்பு இருந்தது!
:)))

said...

/
நந்து f/o நிலா said...

குசும்பா நான் பாட்டுக்கு செவனேன்னுதானே இருக்கேன். என்ன ஏன் இங்க இழுக்கற?
/

சும்மா ஒரு கம்பெனிக்கு!!
:))))

said...

வாழ்த்துக்கள் !

25

said...

பின்னூட்டத்துக்கு பதில் சொல்வதை நிறுத்திய அரசியல் பதிவர் சஞ்சய்காந்தி ஒழிக!!!

said...

/
குசும்பன் said...

பின்னூட்டத்துக்கு பதில் சொல்வதை நிறுத்திய அரசியல் பதிவர் சஞ்சய்காந்தி ஒழிக!!!
/
rippeeeetu

said...

@ குசும்பன்
விவசாய பதிவு என்பதால் ”பச்சையாக” எழுதி இருக்கு உங்கள் கிரியேட்டிவிட்டியை மெச்சினோம்.//
மிக்க நன்றி ஐயா..
---
//மாம்ஸ் என்ன இது ஏதோ சன் டீவியில் உடனடி போண்டா செய்வது எப்படி என்று சொல்வது போல் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க:)))//
சரியா எழுத தெரியாம ஆர்வக் கோளாருல பன்றது அப்டி தான் மாமா இருக்கும்.. அதெல்லாம் கண்டுக்கப்படாது.. :)
---
//ஓ இப்ப பதிவு பெருசா இல்லைன்னு சொல்ல வருகிறீர்கள்:))//
ஹிஹி..
---

said...

நன்றி ஜோசப்..
---
//குசும்பன் said...

பதிவு கூறும் நீதி:

1)பதிவு ஆசிரியர் ஒரு மிராசு.//

இப்போதெல்லாம் என்னை பற்றி தவறான வதந்தி பரப்புவதை முழு நேரத் தொழிலாகவே வைத்திருக்கும் குசும்பனை நம்ப வேண்டும். நான் மிக சிறிய விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன்.

// 2) உடம்பில் இன்னும் இளமை இருக்கு.//
தயவு செய்து இதில் "இன்னும்" என்ற வார்த்தையை யாரும் படிக்க வேண்டாம்.
// 3) கல்யாணத்துக்கு பெண் கொடுப்பவர்கள் கொடுக்கலாம்.//
இந்த ஒரு காரணத்திற்காகவே மேலே இருக்கும் 2 தவறுகளையும் மன்னிக்கிறேன்... யாராவது குடுங்கய்யா.. :(
-------
//குசும்பன் said...

மாம்ஸ் பதிவு அருமை! மேலே சொல்லி இருக்கும் கமெண்ட் சும்மா லோலாங்காட்டிங்கும்//
ஹிஹி.. மாமா.. உங்க மனசு எனக்கு தெரியும் மாமா.. :)

said...

@ இந்தியன் : நன்றி ஐயா.. யாராவது ஒருத்தர் நமக்கு பிடிக்காத மாதிரி எப்போதாவது எதாவது செய்துவிட்டால், பிறகு அவர்கள் எது செய்தாலும் தாறாகவே பார்க்கும் நல்லவர்கள் மத்தியில் பிடிச்ச விஷயங்களுக்கு தட்டி குடுக்கும் உங்கள் விமர்சனம் எதுவாக இருந்தாலும் அதை மதிக்கிறேன். இந்தியன் என்ற பெயருக்கு நீங்கள் தகுதியானவர் தான். விரைவில் உங்கள் வலைப்பூவில் சந்திப்போம். :)
---
//வெங்கட்ராமன் said...

ஏதோ எங்கள திட்டி பதிவு போட்டுருக்கீங்கன்னு தான் வந்தேன். ஆனா, சூப்பரான பதிவு//

நன்றி தலைவரே... பூக்கடைக்கும் விளம்பரம் தேவை படுதே. பழைய சோறும் சின்ன வெங்காயமும் நல்லது தான். ஆனா அதை அப்படியே குடுத்தா யாரும் வாங்கி சாப்பிட மாட்டாங்க. ஒரு அலுமினிய தாளில் சுற்றி குடுத்தா தான் போட்டி போட்டு வாங்கி சாப்பிடுவாங்க. அதான் இந்த மொள்ளமாறி தனமான தலைப்பு. மன்னிக்கவும். :)
---
// Jeeves said...

நெல்லு மரம் எவ்வளோ உயரத்துக்கு வளரும் ?//
ரொம்ப உயரத்துக்கு வளரும். யானை,ஒட்டகம் எல்லாம் இதன் கிளைகளை தான் ஒடிச்சி சாப்பிடும். :)

said...

@ குசும்பன்
//ஒரு விவசாய பதிவுக்கு இப்படி டரியலா தலைப்பு வைக்கும் பொழுதே நீங்க பெரும் அரசியல்வாதி ஆகிட்டீங்கன்னு தெரியுதுங்கோ!!//
தவறு.. பெரும் மொள்ளமாறி ஆயிட்டேன். இரண்டும் ஒன்று தான்னு சொல்றிங்களா? :))
---
//மாம்ஸ் அடுத்த முறை போட்டோ புடிக்க போவும் பொழுது நந்துவையும் அழைத்து போங்க சேற்றில் விழுந்து பிரண்டு போட்டோ எடுப்பார்:)//
அப்போவும் நெற்பயிரை எடுக்க மாட்டார். அதுல இருக்கிற மண் புழு, பூச்சி , கரண்ட் கம்பில உக்காந்து இருக்கிற சிட்டுக் குருவி.. இதை தான் எடுப்பார். :))
---
//நந்து f/o நிலா said...

குசும்பா நான் பாட்டுக்கு செவனேன்னுதானே இருக்கேன். என்ன ஏன் இங்க இழுக்கற?//
அதெப்படி இருக்க விட முடியும்? :)
---

நன்றி நிஜமா நல்லவரே..

----
//அவரிடம் கெஞ்சி கலப்பை பிடித்து ஏர் ஓட்டி மகிழ்ந்தது உங்க பதிவப் பார்த்ததும் ஞாபகம் வந்துருச்சு.//

குடுத்து வைத்தவர் தான். நன்றி அப்துல்லா சார். :)

---

//தமிழ் பிரியன் said...

விவசாயத்தை பற்றியெல்லாம் நமக்கு தெரியாது... அதுவும் நெல் விவசாயம் ம்ஹூம்... பொறுமையா படிச்சி பார்க்கிறென். :)//
அப்பாடா... இந்த பதிவை படிக்க சரியான ஆள் சிக்கிட்டாரு. அண்ணே.. உங்கள மாதிரி "முழு" நகர்வாசிகளுக்கு தான் எழுதினேன். நல்லா படிங்க. அடுத்த வாரம் இதுல டெஸ்ட் இருக்கு. :)

---

//உண்மையா...நான் இதுபோன்று எழுதணும்னு நினைச்சேன். நீங்க அனுபவப்பூர்வமா எழுதி...அழகா முந்திக்கிட்டீங்க//

ஆஹா... நல்ல வேளை.. நான் முந்திகிட்டேன். இல்லைனா காப்பிரைட் பிரச்சனை வந்திருக்கும். :) நன்றி சுரேகா அண்ணாச்சி..

----

said...

// மங்களூர் சிவா said...

தலைப்பு பாத்து என்னடா எதோ ரவுசு பண்ணி இருப்பீங்களோ அப்படின்னு நினைச்சிகிட்டே வந்தேன். மிக அருமையான பதிவு.//
நன்றி மாமா.. நெறைய பேர் இங்க வந்ததுக்கு காரணம் தலைப்பு தான் மாமா.. " நெல் சாகுபட் - ஒரு ரிப்போர்ட்" இப்டி வச்சா யாராவது படிச்சிருப்பங்களா?.. மொதல்ல வச்ச தலைப்பு இது தான்.. இது போணி ஆகாதுனு முடிவு பண்ணி தான் மாத்தினேன்.:))
----

//ஒருத்தன் இன்னொருவன் மண்டைல சணுக்கியால் போடுவது உட்பட நேரில் பார்க்கும் வாய்ப்பை பெற்றவன் என்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.//

எவ்ளோ நல்லவரு இவரு.. :)
---

//ஆனா பச்சை பச்சையா எழுதிட்டீங்க!!
:))//
எல்லாம் உங்களுக்காக தான். :)

----

//மக்கள் தொலைகாட்சி டிவிடி வாங்கியிருக்கேன்னு முன்னாடி பதிவுல சொன்னப்பவே இப்படி ஒரு பதிவு வரும்னு எதிர்பார்ப்பு இருந்தது!
:))//

இல்லை மாம்ஸ்.. இந்த பதிவு எழுத ஆரம்பிச்சி ஒரு வாரத்துக்கு மெல ஆச்சி.. அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை.. அத இன்னும் பாக்கவே இல்ல. :)

---

//குசும்பன் said...

பின்னூட்டத்துக்கு பதில் சொல்வதை நிறுத்திய அரசியல் பதிவர் சஞ்சய்காந்தி ஒழிக!!!//

அய்யா சாமி.. எல்லாம் நேர பிரச்சனை தான்.. நான் எந்த பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லாம இருந்ததில்லை.. ஏன் மாமா என் மேல ஒரு கொலை வெறியோடவே இருக்கிங்க.. :(

.. வைக்கிறேண்டி உமக்கு திங்கள் கிழமை செமத்தியா ஒரு ஆப்பு.. :))
----
//மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

பின்னூட்டத்துக்கு பதில் சொல்வதை நிறுத்திய அரசியல் பதிவர் சஞ்சய்காந்தி ஒழிக!!!
/
rippeeeetu//

அடுத்து உமக்கும் ஒரு ஆப்பு அடிக்க வேண்டியது தான்.. :))

said...

அற்புதம் சஞ்சய். பதிவு நீளமாக இருந்ததால் முன்னர் படிக்க(முடிய)வில்லை. பின்னூட்டங்களை பார்த்த பின்னர் படித்தேன். நல்ல பதிவு. எந்த ஊரில் இதெல்லாம் செய்தீர்கள்? கோவையிலா இல்லை தருமபுரியிலா?

said...

நன்றி வெண்பூ.. இதெல்லாம் கோவையில் இல்லை.. தருமபுரி மாவட்டம் தம்பிசெட்டிபட்டி கிராமத்தில்.:)

said...

//SanJai said...
நன்றி வெண்பூ.. இதெல்லாம் கோவையில் இல்லை.. தருமபுரி மாவட்டம் தம்பிசெட்டிபட்டி கிராமத்தில்.:)
//

என் பால்ய காலம் தருமபுரி மாவட்டத்தில்தான். பாப்பிரெட்டிபட்டியில் ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் க்வார்ட்டர்ஸில் குடியிருந்தோம். ஒன்றாவது முதல் நான்காவது வரை அங்கிருந்த துவக்கப்பள்ளியில்தான் படித்தேன். நினைவுகளை மீட்டெடுக்க உதவியதற்கு நன்றி சஞ்சய்.

said...

//வெண்பூ said...

என் பால்ய காலம் தருமபுரி மாவட்டத்தில்தான். பாப்பிரெட்டிபட்டியில் ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் க்வார்ட்டர்ஸில் குடியிருந்தோம். ஒன்றாவது முதல் நான்காவது வரை அங்கிருந்த துவக்கப்பள்ளியில்தான் படித்தேன். நினைவுகளை மீட்டெடுக்க உதவியதற்கு நன்றி சஞ்சய்.
//
என்ன கொடுமை வெண்பூ இது? 11 மற்றும் 12ஆம் வகுப்புகள் பாப்பிரெட்டிபட்டி PDRல் தான் படித்தேன். :)
ரொம்ப நெருங்கிட்டிங்க போங்க.. :)

said...

காரமான தலைப்பு
பசுமையான உள்ளடக்கம்
இரசித்த்த்த்த்த்த்து(ரொம்ப நீளம்) படித்தேன்

said...

நன்றி செல்வ குமார்.

said...

//விவசாய பதிவு என்பதால் ”பச்சையாக” எழுதி இருக்கு உங்கள் கிரியேட்டிவிட்டியை மெச்சினோம்.

Rippeetu!
:)

said...

anathu thamilarhalum padikka vendiya pathivu..Good job Mr.Sanjay

Tamiler This Week