இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comWednesday, 28 January 2009
கார்த்தி சிதம்பரத்திடம் கேளுங்கள்.
வணக்கம் நண்பர்களே..
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களுல் ஒருவருமான திரு. கார்த்தி ப.சிதம்பரம் அவர்கள் தமிழ்வெளி இணையதள வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார். அவரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கே சென்று கேட்கலாம். கார்த்தி சிதம்பரம் பற்றி அறிய அவர் இணையதளத்தை பார்வையிடவும்.
Posted By..
Wednesday, 21 January 2009
தலைக்கவசம் போட வைத்த 25 ரூபாய்
நான் ஈரோட்டில் இருந்த 4 வருடங்களும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தான் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன். பிறகு கோவையில் அலுவலகம் தொடங்க திட்ட்மிட்டதும், கோவையில் நம்ம தில்லாலங்கடி வேலை செல்லாது என்று ஓட்டுநர் உரிமம் பெற்றேன். நான் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த போது ஒரு போக்குவரத்து/போக்காவரத்து காவலரும் என்னை விசாரித்ததில்லை. இரவில் திரைப் படம் பார்க்க செல்வது, நண்பர்கள் வந்தால் அவர்களை அழைத்துவர செல்வது, தொடர்வண்டி நிலையம் செல்வது என முக்கிய்மான எல்லா இடங்களுக்கும் அடிக்கடி சென்றிருக்கிறென். ஆனால் என்னிடம் ஓட்டுநர் உரிமமோ வாகனத்திற்கான சான்றிதல்களோ எந்த அலுவலரும் விசாரித்ததில்லை. பல சமயங்களில் நான் செல்லும் சாலைகளில் இரவில் வாகன தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் என்னை யாரும் நிறுத்தியதில்லை. இன்றுவரை அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. பார்ப்பதற்கு மிக நாகரிகமானவன் போல் கூட இருக்க மாட்டேன். ஆனால் ஓட்டுநர் உரிமம் பெற்ற ஒரு வாரத்திற்குள் இரவு நேரத்தில் பேருந்து நிலையம் அருகில் ஒரு காவலர் என் வாகனத்தை நிறுத்தினார். அதான் உரிமம் இருக்கே. :).. நல்ல வேளை அவர் வாகனத்திற்கான சான்றிதல்கள் எதுவும் கேட்கவில்லை. கேட்டிருந்தால் சங்கு தான். :)
நாங்கள் கோவையில் அலுவலகம் தொடங்க ஆரம்பித்த சமயம் தமிழக அரசு , அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் உபயோகிக்க வேண்டும் என உத்தரவு போட்டது. ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னாடி அமர்ந்து வருபவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது அரசாணை. அப்போது நான் தினமும் ஈரோட்டிலிருந்து கோவை வந்து அலுவலகம் மற்றும் சேமிப்புக் கிடங்கிற்கான இடம் தேர்வு செய்ய ஒரு இடைத்தரகர் மற்றும் என் நண்பர் ஒருவருடன் இரு சகக்ர வாகணத்தில் சென்று சரியான இடம் பார்த்துக் கொண்டிருந்தேன். வாகனத்தில் பின்னாடி அமர்பவரும் தலைக்கவசம் போட வேண்டும் என்பதால் நான் புது இருசக்கர வாகனம் வாங்கும் முன்பே தலைக்கவசம் வாங்கி விட்டேன். தினமும் அதை ஈரோட்டிலிருந்து பேருந்தில் வரும் போது கொண்டுவந்து கோவையில் வாகனத்தில் செல்லும் போது உபயோகிப்பேன்.
பிறகு சில நாட்களிலேயே அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. ஆகவே நான் தலைக்கவசம் பயன்படுத்துவதையும் தவிர்த்துவிட்டேன். பிறகு கோவை வந்து புதிய வாகனம் வாங்கும் போது அவர்கள் கொடுத்த தலைக்கவசமும் திருப்பிக் கொடுத்துவிட்டேன். நான் ஆரம்பத்தில் வாங்கியதை வைத்திருந்தேன். ஆனால் அதை அணிந்து வாகனம் ஓட்டியதே இல்லை. வாகனம் வாங்கும் முன்பே தலைக்கவசம் வாங்கிவன் நான் ஒருவனாகத் தான் இருப்பேன்.
சமீபத்தில் திருப்பூர் சென்றுவிட்டு என் இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தேன். அப்போது பின்னாடி அமர்ந்திருந்த எங்கள் விற்பனை அலுவலர் தான் வண்டி ஓட்டுவதாக கூறினார். சரி.. பாசக்கார பய.. ரொம்ப தூரம் வாகனம் ஓட்டியதில் நான் களைப்பாக இருப்பேன் என்று எண்ணி கேட்கிறார் போலும் என்று நினைத்து அவரை ஓட்ட சொன்னேன். கொஞ்ச தூரம் வந்ததும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரில் மூன்று போக்குவரத்துக் காவலர்கள் எங்களை நிற்க சொன்னார்கள். எப்போதுமே நம்ம பாசக்கார பயலுக நேரம் காலம் தெரியாமல் சொதப்புவதில் நம்மையே மிஞ்சுபவர்களாச்சே என்று நினைத்துக் கொண்டு, வாகனத்தில் இருந்து இறங்குவதற்கு முன் அவரிடம் உரிமம் உள்ளதா என விசாரித்தேன். நான் நினைத்த மாதிரியே நடந்தது. உரிமத்தை தொலைத்துவிட்டாராம். அதான பார்த்தேன். சரி கொஞ்சம் முன்னாடி நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டு அவரை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு வாகனத்தில் இருந்த சான்றிதல்களை எல்லாம் எடுத்துக் கொண்டு நான் காவல் அதிகாரிகள் அருகில் சென்றேன். எங்களை நிறுத்திய அதிகாரி மற்றவர்களை ஓரங்கட்டுவதில் மும்முரமாய் இருந்தது எனக்கு வசதியாய் இருந்தது. ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த அதிகாரி அருகில் சென்று பவ்யமாய் எல்லா ஆவணங்களியும் கொடுத்தேன். பதிவு சான்றிதல், வாகன காப்பீட்டுச் சான்றிதல் எலலாம் சரியாக இருந்தது. அடுத்து?.. வேறென்ன.. ஓட்டுநர் உரிமம் இருக்கா என்று வினவினார். ஹிஹி.. ஓட்டியவ்ரிடம் தானே இல்லை.. உட்கார்ந்து வந்த என்னிடம் இருக்கே.. ஒருவழியாய் அன்று தில்லாலங்கடி வேலை செய்து தப்பித்தேன். அது வரை நான் அபராதம் என்று ஒரு பைசாவும் கட்டியதில்லை.
இதெல்லாம் பழங்கதை.. இப்போ கோவை மாநகர காவல்துறை ஆணையர் மஹாலி அவர்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தே ஆக வேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டார். அப்படியும் நான் அதை பின்பற்றாமல் தான் சுற்றிக் கொண்டிருந்தேன். சில தினங்களுக்கு முன் இரவு ஒரு பாசக்கார முகவர் அவராகவே அழைத்தார் காசோலை தருவதற்கு. அது கனவா நனவா என்ற ஆச்சர்யத்தில் சென்ற எனக்கு நிஜமாகவே காசோலை அளித்து திக்குமுக்காட வைத்தார். அந்த மிதப்பிலேயே வந்துக் கொண்டிருந்த என்னை லட்சுமி ஆலைகள் தாண்டி ஒரு காவல் துறை அக்கா நிறுத்தவிட்டார். நான் நல்ல பிள்ளையாய் வாகன ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் போய் நின்றேன். அதற்கு அந்த அக்கா “ அதெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் தம்பி. தலைக்கவசம் எங்கே?” என வினவினார். அங்க அக்காவை பார்ப்பதற்கு மிக நல்லவராகவே தெரிந்தார். இத்தனை ஆண்டுகால சந்தைப் படுத்துதல் துறையில் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒரே சிறப்பம்சம் இது தான். யாராக இருந்தாலும் முகம் பார்த்ததுமே அவர் எப்படிப் பட்டவராக இருபபார் என ஓரளவுக்கு கணித்து விட முடிகிறது. ஆஹா.. மாட்டிக்கிட்டயே காந்தி.. என்று நினைத்த வாறே “ அக்கா.. மன்னித்துக் கொள்ளுங்கள் அக்கா. காலையில் இருந்து வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அப்போது தலைக்கவசத்துடன் தானக்கா ஓட்டினேன். இப்போது வீட்டிலிருந்து ஒரு நண்பரை பார்ப்பதற்காக வந்தேன். இப்போது தான் தலைக்கவசத்தை வீட்டில் வைத்துவிட்டு வந்தேன். இதுவரை நான் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதே இல்லை. இந்த ஒருமுறை மட்டும் விட்டுவிடுங்கள் அக்கா. இனி தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்ட மாட்டேன்..” என்று கூச்சநாச்சமே இல்லாமல் பொய் சொன்னேன். நிச்சயம் அபராதம் கட்டியாக வேண்டும் என்றாலும் கட்டிவிடுகிறேன். தவறு என்னோடது தானே என்று மிக நல்லவன் போல் நன்றாகவே நடித்தேன். அவரும் அதை நம்பியது போல் தான் தெரிந்தது. இன்னொருவரும் இதே போல் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் அபராதம் கட்ட 100 ரூபாய் இல்லை என்று அளந்து விட்டுக் கொண்டிருந்தார். பிறகு அந்த அக்கா என்னைப் பார்த்து “ பாருங்க இவரிடம் 100 ரூபாய் இல்லையாம். கோவைக்காரங்க சட்டைப் பையில் 100 ரூபாய் கூட இல்லாமல் சுற்றுவார்களாம். இதை நான் நம்பனுமாம்” என்று சொனனார். சரி இருங்க என்று சொல்லிவிட்டு மற்ற எல்லாரிடமும் அபராதம் வசூலித்து தவறாமல அதற்கான ரசீதையும் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆஹா.. நம்மை இன்னுமா இந்த உலகம் நம்புகிறது. விட்டுவிடுவார் போல் இருக்கே என்று நினைத்து ஓரமாக நின்றுக் கொண்டேன். அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கு அபராதம் போட்டு ரசீதும் எழுதிவிட்டார்கள் அந்த அக்கா. ஆனால் அந்த தோழரோ 50 ரூபாய் தான் இருக்கிறது. 100 ரூபாய் இல்லை என்று நிஜமோ பொய்யோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் புலம்பலில் கடுப்பான அக்கா வாகன சாவியை கொடுத்துவிட்டு செல்லுங்கள். பணம் கொடுத்துவிட்டு வாகனத்தை எடுத்து செல்லுங்கள் என்று கோபமாக சொல்லிவிட்டார். இன்னும் சற்று நேரம் இருந்தால் நமக்கும் ஆப்பு அடிப்பார் போல என்று நினைத்து “ அக்கா.. நான் வேண்டுமானால் அபராதம் செலுத்திவிடுகிறேன்.. நேரம் ஆகிறது “ என்று சொன்னேன். உடனே இன்னொரு நண்பரையும் என்னையும் பார்த்து அந்த 50 ரூபாய் தோழரை காண்பித்து இவருக்கு ஆளுக்கு 25 ரூபாய் கொடுத்துவிட்டு செல்லுங்கள். நான் ரசீது எழுதிவிட்டேன். இவர் 50 ரூபாய் மட்டும் கொடுத்தால் மீதம் 50 ரூபாய் நான் தான் கட்ட வேண்டும்.” என்றார். நான் 25 ரூபாயை அக்காவிடம் கொடுத்தேன் . ஆனால் அவர் அதை அந்தத் தோழரிடம் கொடுக்க சொன்னார். ஆஹா .. காவல் துறையில் இவ்வளவு நல்ல அக்காவா என்று நினைத்துக் கொண்டு அந்த தோழரிடம் 25 ரூபாய்க் கொடுத்து விட்டு அக்காவிர்கு நன்றி சொல்லி கிளம்பினேன்.
கிளம்பும் போது அக்கா சொன்னாங்க. “ நகரில் மொத்தல் 21 இடத்தில் இது போன்ற தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகவே யாரும் தப்ப முடியாது. இனி தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்ட வேண்டாம். மீறினால் ஒரு நாளைக்கு குறைந்தது 100 ரூபாய் நீங்கள் அபராதம் கட்டுவது உறுதி” என்றார்
அவர் சொன்னது போலவே நகரில் எங்கெங்கு காணினும் தலைக்கவச சோதனைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் என்னை யாரும் நிறுத்தவில்லை. பின்ன.. தலைக்கவசம் இல்லாமல் ஓட்டினால் தானே நிறுத்துவார்கள். :))
பின்குறிப்பு : காலையில் இணையத்தில் என்னைக் கண்ட தாரணிபிரியா அக்கா “ டேய் தம்பி, என்னடா எப்போவும் அரசியல் பதிவா எழுதிட்டு இருக்க.. உன்னை திட்ட வேண்டும் போல் ஆசையா இருக்கு..ஒரு மொக்கை பதிவு போடுடா.. வந்து கும்மி அடிச்சிடறேன்” என்று பாசமாய் கேட்டதற்காகத் தான் இந்த மொக்கை.. எதுவாக இருந்தாலும் அவர திட்டிக் கொள்ளவும். :)
பிகு2 : என்னாலும் ஆங்கில சொற்கள் கலக்காமல் தமிழில் எழுத முடியும். :))
பிகு3 : ஆனாலும் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுத முடியாது. :))
மொக்கை போட்டவன்..
Tuesday, 20 January 2009
நீதிபதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?
மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் பெரிய சாதனைகள் என்றால் அதில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கும் தகவல் அரியும் உரிமை சட்டத்திற்கும் முக்கிய இடம் உண்டு. இந்த சட்டத்தால் பல அழுகிய நாறிப் போன சமாச்சாரங்கள் எல்லாம் வெளிய வந்தது. அரசின் ரகசியமில்லாத எந்த ஆவணத்தின் விவரங்களையும் பொது மக்களால் அறிந்துக் கொள்ள முடிகிறது. இதை பற்றி ஏற்கனவே நிறைய பேர் எழுதிவிட்டதால் இப்போதைய விவகாரத்திற்கு வருவோம்.
சமீபத்தில், தகவல் அறியும் உரிமை அமைப்புக்கான கமிஷனர், நீதிபதிகளின் சொத்து விவரங்களையும் இந்த சட்டத்தின் படி யாராவது கேட்டால் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். உடனே நம்ம தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் ஈகோ டமார்ன்னு எகிறி குதிச்சி ருத்ர தாண்டவம் ஆடிடிச்சி. நாங்க எல்லாம் நீதிபதிகள். நாங்க யாருக்கும் எங்க சொத்து விவரங்களை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று திருவாய் மலர்ந்தார்.
ஏனுங்க சொல்ல மாட்டிங்க அப்டின்னு கேட்டதுக்கு, “ நீதிபதிகள் நியமனம் மாதிரியான விவரங்களை நான் சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் கூட சொல்வதில்லை. நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை என்னை நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள். அதை வெளியே சொல்வது நம்பிக்கை துரோகம் “ என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். அட என்னங்க இது வம்பா போச்சி.. மக்கள் என்ன நீதிபதிகளின் வீட்டு விவகாரத்தையும் சொந்த கஷ்ட நஷ்டங்களையுமா கேக்கறாங்க. சொத்து விவரங்களைத் தானே. அரசாங்க அமைப்பின் அங்கத்தினர் என்ற வகையில் நீங்களும் இந்த சட்டத்திற்கு கட்டுபட்டவர்கள் தான்.
மேலும் , நீதிபதிகளின் மீதான நம்பிக்கை இப்போதெல்லாம் குறைந்து வருகிறது. நீதிபதிகளுக்கு பணவெறி பிடித்து ஆட்டுவதும் சமீக காலங்களாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. கீழ்க் கோர்ட்டுகளில் நீதிபதிகள் கவர் வாங்குவது போன்ற குற்றச் சாட்டுகள் ஏற்கனவே வந்துக் கொண்டிருக்கிறது. ஆகவே நீதிபதிகளின் சொத்து விவரங்களை வாங்கி அதை ஆவணமாக தலைமை நீதிபதி வைத்திருக்கிறார். அந்த ஆவணங்களில் உள்ள விவரங்களை மக்கள் கேட்க்கும் போது தெரியபடுத்துவது தலைமை நீதிபதியின் கடமையே. சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான். இதை நிலைநாட்டும் நீதிபதிகள் இதற்கு முன்னாதாரணமாக இருக்க வேண்டுமே ஒழிய தங்களுக்கே உத்தரவா என்ற தலைக்கனத்தில் இருக்கக் கூடாது.
Posted By..
Monday, 19 January 2009
Bay of Pigs - மூக்குடைத்துக் கொண்ட அமெரிக்கா - 50 ஆண்டுகளை கடந்த சுதந்திர கியூபாவிற்கு வாழ்த்துக்கள்.
1961ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி கியூபாவின் தெற்கு பகுதியில் உள்ள Bay of Pigs என்ற இடத்தின் மீது கியூபாவில் இருந்து நாடுகடத்தப் பட்டு அமெரிக்காவில் தஞ்சம் புகுத்தவர்களால் ஒரு படையெடுப்பு நிகழ்த்தப் பட்டது. இதற்கு திட்டம் வகுத்து, நிதியுதவி, ஆயுத உதவி மற்றும் பயிற்சி அளித்தவர்கள் சாட்சாத் அமெரிக்க உளவு நிறுவனமான சி ஐ ஏ தான். Playa Girón என்ற கடற்கரையில் வந்திறங்கிய அமெரிக்க ஆதரவு புரட்சிப் படையை சோவியத் மூலம் பயிற்சியும் ஆயுதபலமும் அளிக்கப் பட்ட கேஸ்ட்ரோவின் ராணுவம் மூன்றே நாட்களில் வெற்றிகரமாக முறியடித்தது. இந்த படையெடுப்பு 19ஆம் தேதியே முடிவுக்கு வந்தது. இந்த புரட்சிப் படையில் சுமார் 1300 ( சிலர் 1400 என்று சொல்கிறார்கள் ) பேர் இருந்தார்கள். அதில் 93 பேர் (அல்லது 68 பேர்) கியூப ராணுவத்தால் கொல்லப் பட்டார்கள். மற்றவர்கள் போர்க் கைதிகளாக பிடிபட்டார்கள்.கியூப ராணுவத் தரப்பில் 87 பேர் இறந்ததாகவும் மேலும் பலர் காயமடந்ததாகவும் அரசாங்கம் அறிவித்தது. ( எண்ணிக்கைகள் பல இடங்களிலும் வேறு வேறாகவே இருக்கிறது )
பிடிபட்டவர்களில் சிலர் தூக்கிலிடப் பட்டதாகவும் , சிலர் சிறையிடைக்கப் பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. பின்னர் 1962 டிசம்பர் 21ம் தேதி கேஸ்ட்ரோவும் ஜேம்ஸ் பி டொனொன் என்ற அமெரிக்க வழக்கரிஞறும் கையெழுத்திட்ட ஒப்பந்ததின் படி 53 மில்லியன் டாலர் மதிப்பிலான உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு பதிலாக 1113 கைதிகள் ஒப்படைக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த பணம் அமெரிக்காவின் நன்கொடை மூலம் வசூல் செய்யப் பட்டதாம்.
கென்னடிக்கு முன்பு இருந்த குடியரசுத் தலைவரால் திட்டமிடப் பட்டிருந்தாலும் கென்னடி பொறுப்பேற்ற பின் நடந்த நடவடிக்கை என்பதால் அவர் நிர்வாகத்திற்கு பெரும் கெட்டப் பெயர் பெற்றுத் தந்த இந்த தோல்விக்கு பொறுப்பேற்று சிஐஏவின் இயக்குனர் உள்ளிட்ட சில உயரதிகாரிகள் ராஜினாமா செய்ய வைக்கப் பட்டிருக்கிறார்கள்.
ஃபிடல் கேஸ்ட்ரோ தலைமையிலான புரட்சிபடை கியூபாவை கைபற்றிய சில ஆண்டுகளிலேயே இந்த நடவடிக்கை நிகழ்த்தப் பட்டது. ஆனாலும் சோவியத் உதவியில் ஓரளவு பலமான ( அரசு எதிர்ப்பு புரட்சிப் படைகளை எதிர்க்கும் அளவிற்கும் அதிகமாக )ராணுவத்தைக் கொண்டிருந்த கியூபா, இதை மூன்றே தினங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன் பிறகு வேறு வழி இல்லாமல் சில பல குற்றச் சாட்டுகளை சுமத்தி கியூபாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தி தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் இன்று உலகிலேயே மிகச் சிறந்த சுகாதார வசதியும் கல்வி அறிவும் கொண்ட நாடாக கியூபா திகழ்கிறது. 37 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உலகிலேயே கியூபாவில் மட்டுமே உண்டு. கியூபாவின் மருத்துவர்கள் உலகிலேயே மிகச் சிறந்தவர்களாக உலக சுகாதார மையத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
புரட்சிக்கு முன்னர் கியூப மக்களின் சராசரி வயது 58. இப்போது 78. குழந்தைகள் இறப்பு விகிதமும் 10 மடங்கு குறைந்திருக்கிறது. 1000 பேருக்கு 6 மருத்துவர்கள் உள்ளனர். இது அமெரிக்காவைவிட இரண்டு மடங்கு அதிகமாம். மேலும் உலகம் முழுதும் சேவை செய்ய தங்கள் மருத்துவர்கள் 36,500 பேரை கியூபா அனுப்பி இருக்கிறது. இது ஒட்டுமொத்த உலக நாடுகள் அனுப்பிய மருத்துவர்களையும் விட அதிக எண்ணிக்கையாம்.
முடிஞ்சா இதையும் படிங்க சாமியோவ் ..
CASTRO'S ASCENT TO POWER | |
1952: Castro runs for parliament, but elections are called off after Gen. Fulgencio Batista overthrows Cuba's government on March 10. July 26, 1953: May 15, 1955: Jan. 1, 1959: February 1960: June: October: April 16, 1961: Jan. 22, 1962: Feb. 7: October: March 1968: March 18, 1977: April 1980: April 19, 1982: April 1986: December 1991: Jan. 21-25, 1998: June 23, 2001: Dec. 16: March 18, 2003: Oct. 20, 2004: November 2004: July 27, 2006: July 31: Aug. 13: Dec. 2: March 28, 2007: Dec. 18: Jan. 20, 2008: Feb. 19: May 7: Sources: The Associated Press, USA TODAY research |
பின் குறிப்பு : இந்தப் பதிவில் தவறுகள் இருந்தால் பின்னூட்டவும். திருத்திக் கொள்ளப்படும். ஏனெனில் “வரலாறு முக்கியம் அமைச்சரே” .. :)
Friday, 16 January 2009
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Aiz.
என் பாசத்திற்குரிய தோழி Aiz க்கு இன்று ( 16.01) பிறந்தநாள். என் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாதவள் இவள். ரொம்ப வித்தியாசமான தோழி. பெரும் அறிவுஜீவி. அழகாய் கவிதை எழுதுவாள். புதிய தொழில்நுட்பங்கள் பற்றியோ இலக்கியம் பற்றியோ சாதாரனமாய் விவாதிப்பாள். புத்தகப் புழு. புகைப்பட வல்லுநர். இவளுக்கு தெரியாத இசை இணையதளங்களே இருக்க முடியாது. இசைக்கு ராகா மட்டுமே தெரிந்த எனக்கு imeem, last.fm, vodpod இன்னும் சில பயனுள்ள இசைத் தளங்களையும் எனக்கு அறிமுகப் படுத்திவயவள். வழக்காமான அரட்டை மட்டுமே இல்லாமல் எப்போதும் புதுப்புது இணையங்கள் பற்றி சொல்லி என்னையும் படிக்க வைப்பாள். நான் சில இணையம் சார்ந்த பதிவுகள் போடுவதற்கு இவள் தான் காரணம். அனுபவங்களை எழுதுவதில் பெரிய வல்லுநர். எங்கள் நண்பர்களுக்காகவே ஒரு குழு வலைப்பூ ஆரம்பித்து அதற்கும் அதில் இருப்பவர்களுக்கு மட்டுமேயான ஒரு இணைய குழுவுக்கும் தலைமை தாங்கி நடத்துகிறாள். என் வலைப்பூவின் டெம்ப்ளெட் ஆலோசகி. புத்திசாலிப் பெண். அவளை இப்படி எல்லாம் நான் புகழ்ந்ததே இல்லை. இந்தப் பதிவை பார்த்தால் நிச்சயம் இன்ப அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் இவை அனைத்திற்கும் அதற்கு மேலும் பாராட்டுக்களுக்கு தகுதியானவள். இவள நட்பு எனக்கு வரமே. என் தோழி இன்று போல் என்றும் நலமாய் வாழ வாழ்த்துவோம்.
இவள் ஆங்கில வலைப்பூ : Dreamscapes
Posted by..
Tuesday, 13 January 2009
வாக்குரிமை இங்கு ஏலம் விடப் படும்
உங்கள் வாக்குரிமைகளை ஏலம் விட்டு நல்ல விலை பெற்றுத் தருவதற்கு புதியதாக வாக்குரிமை ஏல மையம் அரம்பிக்கப் பட்டுள்ளது. எங்கள் கிளைகள் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் செம்மையாக செயல்படும்.
40 ஆண்டுகால கழக ஆட்சிகளின் புண்ணியத்தில் இன்னும் இலவசங்களை எதிர்பார்த்து வாழவேண்டிய உன்னத நிலையிலேயே வாக்காளர்கள் இருப்பதால் தேர்தல் சமயங்களில் பணம் பார்க்கும் வாய்ப்பை தவற விடக்கூடாது என்ற அரிய நோக்கத்தில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது இந்த ஏல மையம். நாம் இன்னும் 4000 ரூபாய் கலர் டிவிக்கும் 750 ரூபாய் கேஸ் அடுப்புக்கும் தேர்தல் சமயத்தில் இலைக்கு அடியில் வைத்துத் தரப்படும் 2000 ரூபாய்க்கும் ஆளாய்ப் பறக்கும் கேவலமான நிலையில் இருப்பதாலும், துவைக்க சோப்பு வாங்கக் கூட வழி இல்லாமல் அழுக்கு வேஷ்ட்டியுடன் அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் மகாராஜாக்களை போல் பளிங்கு மாளிகைகளில் வாழ்ந்துக் கொண்டு தேர்தலில் பணமழை பொழிவதாலும் இதை செவ்வனே பயன்படுத்திக் கொள்ள எங்கள் நிறுவனம் உங்களுக்கு உதவி செய்யும்.
இங்கு தனி வாக்காளராகவும், குடும்பமாகவும் பதிவு செய்துக் கொள்ளலாம். தனி வாக்காளர் பதிவுக்கு 10% சேவைக் கட்டணமும், குடும்பமாய் பதிவு செய்தால் 8% சேவைக் கட்டணமும் வசூல் செய்யப் படும். பல்க் புக்கிங் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் பரிசுப் பொருட்களும் வழங்கப் படும். அதாவது தெருவில் இருப்பவர்களை எல்லாம் சேர்த்து அவர்களின் வாக்குரிமைகளை ஒட்டு மொத்தமாய் அவர்களின் அனுமதியுடன் ஒருவரே பதிவு செய்யலாம். இதனால் பேப்பர் செலவுகள் மிச்சம் ஆகும். இதனால் மரங்களை காக்கலாம். இது போன்ற பல்க் புக்கிங் செய்பவர்களுக்கு 7% மட்டுமே சேவைக் கட்டணமாக வசூலிக்கப் படும்.
சில கிராமங்கள் மிகவும் கட்டுக் கோப்பாய் இருக்கும். அது போன்ற கிராமங்களின் தலைவர்கள் செய்யும் பல்க் புக்கிங் வாக்குகளுக்கு மிக அதிக சலுகைகள் வழங்கப் படும். அவர்களுக்கு 5% மட்டுமே சேவைக் கட்டணமாக வசூலிக்கப் படும்.
நிபந்தனைகள் :
- குறைந்த பட்சம் ஒரு தேர்தலுக்காவது உங்களை... சாரி.. உங்கள் வாக்குகளை ஏலம் விட நிறுவனத்திற்கு உரிமை உண்டு.
- உங்கள் வாக்குகளுக்கு குறைந்த பட்ச விலையை நீங்கள் நிர்ணயிக்கலாம்.
- குறைந்தபட்ச விலையை விட பல மடங்கு கூடுதல் விலைக்கே ஏலம் விடப் படும். ஒருவேளை உங்கள் ஏலத் தொகை உங்களுக்கு கட்டுபடியாகாத பட்சத்தில் முதல் தேர்தலுக்குப் பிறகு ஒப்பந்தத்தை ரத்து செய்துக் கொள்ளலாம்.
- சேவைக் கட்டணங்கள் உங்கள் வாக்குரிமையின் ஏலத் தொகையின் மதிப்பிலிருந்து கணக்கிடப் படும்.
- பதிவு செய்த பிறகு வரும் முதல் தேர்தலுக்கு முன்பே நிறுவனத்திலிருந்து விலக விரும்பினால் 1000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.
தேர்தல் அறிவித்தவுடன் போட்டியிடும் அரசியல் கட்சிகள் எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்வார்கள். பிறகு குறிப்பிட்ட தேதியில் எங்கள் உறுப்பினர்களின் வாக்குரிமைகள் ஏலம் விடப் படும். தொகுதிவாரியாக ஏலம் விடப் படும். அதிக விலை கொடுக்க முன்வருபவர்களுக்கு அவர்கள் ஏலம் எடுக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு எற்ப உங்கள் முகவரி அடங்கிய விஷேஷ வாக்கு அனுமதி சீட்டு வழங்கப் படும். அதிக எண்ணிக்கையில் ஏலம் எடுக்கும் கட்சிக்கு 1000 வாக்காளருக்கு 10 வாக்காளர்கள் இலவசமாக அளிக்கப் படும். தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு உங்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப் படும். உங்கள் முகவரி உள்ள விஷேஷ சீட்டை உங்களிடம் கொடுக்கும் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். அந்தக் கட்சி தான் உங்களை ஏலம் எடுத்திருக்கும்.
இதன் உயரிய நோக்கம் :
தேர்தல் பிரச்சார செலவுகள் குறையும். வாக்காளர்களின் நேரம் விரயமாகாது. பண பட்டுவாடாவில் குழப்பம் அல்லது தில்லுமுல்லு நடக்காது. உங்கள் வாக்குக்கு உரிய பணம் உங்களுக்கு மிகச் சரியாக கிடைக்கும்.கலவரங்கள் தடுக்கப் படும். தேவையானது சுமூகமக கிடைப்பதால் வாக்கு மையத்தில் ஏற்படும் கலவரங்கள் குறையும். இதனால் அரசாங்கத்திற்கு டென்ஷன் குறையும். யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நம்மக்கு ஒரு புண்ணாக்கும் கிடைககது. ஆகவே தேர்தல் சமயத்தில் காசு பார்க்கும் வாய்ப்பை நழுவ விடக் கூடாது. எபப்டியும் யார் ஆட்சிக்கு வந்தாலும் சாமானிய மக்கள் வாழ்க்கை மேம்பட இன்று செய்யப் போவதில்லை. அப்படி செய்தால் இப்படி இலவசத்துக்கு அலைவோமா?. ஆகவே கேவலமாய இலவசங்களை பெறாமல் நம் வாக்குரிமையை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கவுரவமாய் நாமே கடைக்கு போய் தேவையானதை வாங்கும் நிலை வரவேண்டும் என்பதே எங்கள் நிறுவனத்தில் உயரிய நோக்கம்.
முந்துங்கள்.. முதலில் வரும் 100000 பேருக்கு ஒரு பென்சில் இலவசமாக வழங்கப் படும். இலவசம்னா தான் வாய பொளந்துட்டு வருவோமே.
மெலும் விவரங்களுக்கு அனுகவும் : e(lection)Bay.com
Posted by..
Monday, 12 January 2009
முத்தக்கா வீட்டு திருவிழா
நம்ம முத்தக்காவோட தாத்தா சைவப் பெருந்தகை திரு சு. அருணாச்சலம் அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு முத்தக்கா அழைத்திருந்தார். நானும் வடகரை வேலன் அண்ணாச்சியும் போயிருந்தோம். 4.30 க்கு அண்ணபூர்ணா கலையரங்கத்துக்கு போய்ட்டோம். அங்க போனதும் முத்தக்காவுக்கு போன் பண்ணேன். கீழே உணவகத்தில் குட்டிப் பையன் சபரிக்கு உணவு கொடுத்திருப்பதாகவும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவதாகவும் சொன்னாங்க. ஒன்னும் அவசரமில்லைககா, மெதுவா வாங்க என்று எந்த “உள்நோக்கமும்” இல்லாமல் சொல்லிவிட்டு ஒரு ஓரத்தில் உட்கார்ந்து வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன் :).
மேடையில் ஒரு குழுவினர் பக்தி கீர்த்தனைகள் பாடிக் கொண்டிருந்தார்கள். வேலன் அண்ணாச்சி அதை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தார். பொதுவாக இது போன்ற பஜனைகளை கேட்டுக் கொண்டிருப்பவர்களை பார்த்தால் கிண்டலாக இருக்கும். என்ன புரியுதுன்னு இப்டி பார்த்து தலையாட்றாங்க என்று. ஆனால் நேரில் கேட்கும் போது ரொம்பவே இனிமையாக இருக்கு. கொஞ்சம் என் போனில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
பொதுவாக சிலர் வீட்டு விஷேஷதுக்கு அழைத்து நாம் அங்கு சென்றால், எதோ ஒரு சம்பிரதாயத்துக்கு கூப்ட்டோம். உடனே வந்துட்டான் பாரு.. என்ற ரீதியில் நடந்துக் கொள்வார்கள். இன்னும் சிலர், ஹ்ம்ம் கூப்டோம்.. நீ வந்துட்ட. சரி போனாப் போகுதுன்னு வா வான்னு மட்டும் சொல்லிட்டு வேலையப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். ஹிஹி. வேற எனன் தான் பண்ணனுமாம்? :) . இது போன்ற விழாக்களில் நம் அழிச்சாட்டியம் தாங்க முடியாது. அவர்கள் நம்ம மட்டுமே அல்லது நம்மை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். நமக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
என்றெல்லாம் ஓவர் சீன் போடுவோம். அது ரொம்பவே தப்பு. அவர்களுக்கு எல்லா விருந்தினர்களையும் கவனித்தாக வேண்டும். நம்ம முத்தக்கா இருக்காங்களே.. இதுல எந்த வகையும் இல்லை. அநியாயத்துக்கு கவனிச்சாங்க. மாயவரத்துக்காரங்க எல்லாருமே இப்டி தானோ. கிருஷ்ணாக்கா ( அபி அம்மா ) இப்டி தான் கவனிச்சி எங்களை திக்கு முக்காட வச்சாங்க. முத்தக்கா எங்களை உட்காரவே விடலை. அவங்க அம்மா, அப்பா, சித்தப்பா, பெரியப்பா, மாமா, சகோதரர்கள், மாமியார் இன்னும் ஏராளமான அவர்களின் நெருங்கிய உறவினர்களை எலலாம் அழைத்து வந்து எங்களை அறிமுகப் படுத்திவைத்துக் கொண்டே இருந்தார்கள். எங்களுக்கு பயங்கர சந்தோஷம். எவ்ளோ பேர் இப்போ இப்டி ஆத்மார்த்தமா விருந்தினர்களை கவனிக்கிறாங்க?. ரொம்ப நன்றி முத்தக்கா. உங்க நூற்றாண்டு விழாவுக்கும் நாங்க வந்து ஆசிர்வாதம் வாங்கனும்.
எங்களை கடந்து போகும் போதும் வரும் போதும் சாப்டுங்க சாப்டுங்கன்னு ரொம்ப அன்பா சொல்லிட்டே இருந்தாங்க. அப்புறம் சாப்ட்டுக்கறோம்னு சொல்லியும் கேட்கலை. அடிக்கடி சொலிட்டே இருந்தாங்க. வேலன் அண்ணாச்சி பொறுமை இழந்துட்டார். யோவ் வாய்யா.. நாம் போகலைனா அவங்களே கொண்டு வந்து குடுத்துடுவாங்க போல. எதுக்கு அவங்களுக்கு சிரமம் வைக்கனும்னு சொல்லி சாப்ட இழுத்துட்டு போனார். நல்ல சுவையான ஜிலேபியும் மசால் போண்டாவும் குடுத்தாங்க.
காலையிலிருந்தே விழா நடந்துக் கொண்டிருந்தாலும் மாலை தான் களைகட்டியது. சிறிது நேரத்தில் இறைவணக்கப் பாடல்களை பெரியவரின் கொள்ளுபேரனும் பேத்திகளும்(எல்லாம் பொடிசுங்க) பாடினார்கள். அட அட.. என்ன இனிமையான குரல் பசங்களுக்கு, அதைவிட அவர்கள் முகபாவம் இருக்கே. வாவ்.. அவ்ளோ அழகு. இதை எல்லாம் ரசிக்காம எப்டி தான் இந்த அம்மாக்கள் எல்லாம் டிவியிலும் கம்ப்யூட்டரிலும் தலையை விட்டு வாழ்ந்துட்டு இருக்காங்களோ..
ஹ்ம்ம்ம்...
குழலினிது யாழினிது என்பர்......... :(
இறைவணக்கம் வாசிக்க முக்கியமான ஒருவர் நேரில் வரமுடியாததால் அவர் அம்மாவிடம் தன் தேன் குரலில் ஒரு பாடலை தாத்தாவிற்காக பாடி அனுப்பி இருந்தார். அதை ஒலிபரப்பினார்கள். ஆஹா.. என்ன ஒரு கனீர் குரல். வேறு யாரு? ஜூனியர் முத்தக்கா மாதினி பாப்பா தான். அதை வலைப்பதிவில் போட சொல்வோம்.
பிறகு மேடையில் அமர வேண்டிய விருந்தினர்களை எல்லாம் அழைத்தார்கள். அப்போ தான் தெரிஞ்சது முத்தக்கா எம்புட்டு பெரிய ஆளுன்னு.. கோவை மேயர், திமுக முன்னாள் எம்பி, பேரூர் ஆதினம், அறநிலையத் துறை துணை ஆணையர், அவினாசிலிங்கம் பல்கலை வேந்தர், அண்ணபூர்னா நிர்வாக இயக்குநர், சில பேராசிரியர்கள் என் பெரும் புள்ளிகள் தான் எல்லோரும். எல்லோரும் முத்தக்கா குடும்பத்துக்கு மிகவும் நெருகமானவர்கள் போலும். அவர்கள் குடும்பத்தை பற்றியும் பெரியவரைப் பற்றியும் அவ்ளோ பேசினாங்க. மதியமே வைகோ வந்துட்டு போனாராம்.
அதுல ஒரு விருந்தினர் சொன்னார் “ சிலர் தடம் பார்த்து நடப்பார்கள். சிலர் தடையம் விட்டுப் போவார்கள். ஆனால் இந்தப் பெரியவர் தான் தடம் பார்த்து நடந்து தடையமும் விட்டு வைத்திருக்கிறார்”. உண்மைதான். காரணம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர்கள் பெரியவரின் பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து தான். அதிலும் முத்தக்காவின் பெரியம்மாவும் தாத்தாவின் மருமகளுமான் ஒரு அம்மா தான் அவ்வளவு அழகாய் தொகுத்து வழங்கினார். கல்யாணம் முடிந்ததும் தனிக் குடித்தனம் போனோமா, பெத்தவங்களை கை கழுவினோமா அல்லது முதியோர் இல்லத்தில் விட்டோமான்னு இருக்கிற இந்தக் காலத்துல் நூற்றாண்டு விழா கொண்டாடும் தன் மாமனார் மாமியாரை கொண்டாடும் மருமகள்கள் அதிசயம் தானே.
என்னை வெகுவாக கவர்ந்தது என்று சொல்வதைவிட பிரமிக்க வைத்தது என்று சொன்னால் அது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. அவ்வளவு அருமையாக திட்டமிட்டு நடத்தி இருக்கிறார்கள். முழுக்க முழுக்க அவர்கள் குடும்பத்தார் தான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்கள். தேர்ந்த ப்ரொஃபொஷனல்களால் திட்டமிட்டு நடத்தப் படும் பல பிசினஸ் மீட்டிங்குகளில் ஏராளமான சொதப்பல்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த விழாவை அவ்வளவு நேர்த்தியாக நடத்தினார்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சபாஷ்.
பிறகு எங்கள் அருகில் அமர்ந்து முத்தக்கா தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் காட்டி யார் , என்ன உறவு, என்ன செய்கிறார்கள் என்றெல்லாம்
சொல்லிக் கொண்டிருந்தார். பெருமைப்படும் அளவிற்கு மிகச் சிறந்த குடும்பம். முத்தக்காவின் மகன் சபர் செம சமத்து. பொதுவாகக் குழந்தைகள், அவர்களை தூக்கிவைத்துக் கொள்ள சொல்லி தான் நச்சரிபபார்கள். ஆனால் சபரியோ யார் தூக்கிவைத்துக் கொண்டாலும் கீழே இறக்கிவிட சொல்லிக் கொண்டிருந்தான். முத்தக்கா போலவே ரொம்ப நல்லா பழகினான். இன்று மதியம் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பெரும் பதிவர் சந்திப்பு இருக்காம். மிச்சம் மீதி பலகாரங்களை எல்லாம் வ்சூல் செய்ய ஜி3 அக்கா வரதா சொல்லி இருக்கங்களாம். :)
பெரியவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு இரவு உணவையும் முடித்துக் கொண்டு முத்தக்காவிடம் சொல்லிவிட்டு மிகவும் சந்தோஷமாக வந்தோம்.
சொல்வதற்கு இன்னும் ஏராளமாக இருக்கு. ஆனால் இதுவே ரொம்ப பெரிய பதிவா போய்டிசி. இதையே எவ்ளோ பேர் முழுசா படிப்பாங்கன்னு தெரியலை. அதனால இதோட முடிச்சிக்கிறேன். :)
கொசுறு : ஆசிர்வாதம் வாங்க செல்லும் முன் நம்ம பெரியவர் வேலன் அண்ணாச்சி என்னிடம் “ எனக்கு 100 வயசு வழனும்னு எல்லாம் ஆசை இல்லைபா.. ஆனா நீ 100 வயசு வாழனும். உன் கிட்டயும் நான் ஆசிர்வாதம் வாங்கனும். இதான் என் ஆசை” அப்டின்னு சொன்னார். பெரிசுக்கு என்னா வில்லத் தனம் பாருங்க மக்களே. இப்போவே 70 வயசை நெருங்கிட்டு இருக்கார். அவருக்கு இன்னும் 84 வருஷம் கழிச்சி என் நூற்றாண்டுலையும் ஆசிர்வாதம் வாங்கி அதுவரைக்கும் கதம்பம் போடனுமாம். கண்டிக்க ஆளில்லால வளர்ந்துட்டு இருககார் இவரு. :)
விழாவில் தாத்தாவின் நூற்றாண்டு மலர் மற்றும் அவர்கள் குடும்பம் பற்றிய குறுந்தகடு வெளியிட்டார்கள். நூற்றாண்டு மலரும் குறுந்தகடும் வெளியிடுவதற்காக மட்டும் குறைந்த அளவில் கொண்டு வந்தார்களாம். மற்றவை அச்சில் இருக்கிறதாம். இது தெரிந்தும் நூற்றாண்டு மலரை நான் முத்தக்காகிட்ட கேட்டேன். உடனே வேகமா எழுந்து போய்ட்டாங்க. அடடா.. தப்பா கேட்டுட்டோம் போல.. அக்கா கோச்சிட்டு போய்ட்டாங்களே.. இரவு சாப்பாடு இல்லாமலே அனுப்பிடுவாங்களோன்னு நான் கவலையோட உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்துல ஒரு மஞ்சள் பையோட வந்தாங்க. அதை என் கையில் கொடுத்து “ இதை இப்போ பிரிக்காத. புத்தகம் அனுப்ப உங்க அட்ரஸ் கேட்டாங்க. அதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு நான் தெரியாம சுட்டுட்டு வந்துட்டேன். வச்சிக்கோ”ன்னு சொன்னாங்க. ஆஹா.. சொந்த வீட்லையே சுட வச்சிட்டோம்ல.. :))
விழாமுடிந்து வந்ததும் இதை எழுதிவிட்டேன். இல்லைனா என் சோம்பேறி தனத்தால எழுதாம விட்டு விடுவேன். மனசுக்கு திருப்தியான நல்ல விஷயங்களை மத்தவங்க கிட்ட பகிர்ந்துக்காம இருக்கிறது தப்புங்கோ.ஆனா தாமதமா இன்னைக்கு தான் பப்ளிஷ் பண்றேன். :)
Posted by..
Friday, 9 January 2009
திருமங்கலத்தில் அதிமுக தான் ஜெயிக்கும்.
சென்ற பதிவின் தலைப்பு கும்மிக்கு மட்டும் இல்லை. நிஜமும் கூட. அதிமுக தான் ஜெயிக்கும். நம்ம நாட்ல இன்னும் சின்னத்தை பார்த்து ஓட்டுப் போடுபவர்கள் தான் அதிகம். அதுவும் சிறிய பின்தங்கிய பகுதியான திருமங்கலம் மாதிரியான பகுதியில் வேட்பாளரையோ நாட்டு/மாநில நலனையோ வேறு எந்த கருமத்தையோ பார்த்து வாக்களிக்க மாட்டார்கள். ஒன்லி சின்னம் மேட்டர்ஸ். :)
ஆகவே எந்த கூட்டணி பலமோ அந்தக் கூட்டணி ஜெயிக்கும். கடந்த தேர்தலில் திமுக+காங்கிரஸ்+பாமக+கம்யூனிஸ்டுகள் எல்லோரும் ஓரணியில் இருந்தார்கள். அதிமுக+மதிமுக ஓரணியில் இருந்தார்கள். பெரிய கூட்டணியாக இருந்தும் திமுக தோல்வி அடைந்தது. மதிமுக தான் வென்றது.
இப்போது திமுகவுடன் இருப்பதோ காங்கிரஸ் மட்டுமே. வி.சிறுத்தைகளால் தென்மாவட்டங்களில் எந்த பயனும் இல்லை. அவர்களால் பயனும் இல்லை.பாதகமும் இல்லை. அப்போ பெரிய கூட்டணியா இருந்தும் தோல்வி அடைந்த திமுக இன்று சிறிய கூட்டணி ஆகிவிட்டது.
மாறாக அன்று சிறிய கூட்டணியாக இருந்த அதுமுக கூட்டணி இன்று பலமான கூட்டணியாக இருக்கிறது. பாமகவின் ஓட்டுகள் நிச்சயம் அதிமுகவிற்கு தான் விழும். இல்லை என்றால் ராமதாஸ் நடுநிலை வகிப்பதாக அறிவித்திருக்க மாட்டார். பாமக தொண்டர்கள் திமுக கூட்டணி வேண்டாம் என்ற முடிவில் இருப்பதால் தான் இந்த நிலை.
சரி.. ஆளுங்கட்சி செல்வாக்கை வைத்து தில்லுமுல்லு செய்து ஜெயிக்கலாம் என்று நினைத்தாலும் நரேஷ்குப்தாவும் கோபால்சாமியும் அதுக்கும் வச்சிட்டாங்க ஆப்பு. மாநில காவல்துறையை நம்பாமல் துணை ராணுவப் படையை இறக்கி விட்டுவிட்டார்கள். அதோடு விட்டார்களா? எப்போதும் திமுகவிற்கு விசுவாசமா இருக்கும் தமிழக ஆசிரியர் பெருமக்களை வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டு மத்திய அரசு ஊழியர்களை வாக்கு மையங்களில் பணி அமர்த்திவிட்டார்கள். ஆகவே ஆளுங்கட்சிக்கே உரிய அஜால் குஜால் வேலைக்கும் வழி இல்லாமல் போய்விட்டது. ஆகவே எந்த நவீன கேமராவை வைத்து எந்த ஆங்கிளில் பார்த்தாலும் அதிமுக வெற்றி தான் தெளிவாகத் தெரிகிறது..
பிறகு எதற்கு 2 கூட்டணிகளும் சேர்ந்து தனித்தனியா 150 கோடி ரூபாய்க்கு மேல செலவு பண்ணதா பேசிக்கிறாய்ங்க.. இவ்வளவு முதலீடு பண்ணவங்க இனி வரும் நாட்களில் இதை வட்டியோட சம்பாதிக்க என்ன எல்லாம் பண்ணுவாய்ங்களோ? அது ஒன்னும் சொந்த பணம் இல்ல.. அடிச்ச பணமாத் தான் இருக்கு.. ஆனாலும் அடிச்சதுக்கு அப்புறம் அவங்க சொந்தப் பணமா ஆயிருக்கும் இல்ல..என்னமோ போங்க...
டிஸ்கி : திமுகவும் காங்கிரஸும் கூட்டணி கட்சிகளா இருந்தா எல்லாத்துக்கும் சப்பை கட்டு கட்டனுமா என்ன? போங்கய்யா.. )
Posted by..
Monday, 5 January 2009
ஹிஹி.. சும்மா..
அட ஒன்னு”மில்லி”ங்க.. புதுசா டிசைன் பண்ண வலைப்பதிவு கையொப்பம் ( கொஞ்சம் ஓவரா இருக்கோ ) சோதனை செய்யத்தான் இந்த பதிவு.. நீங்க வழக்கம் போல உங்க வேலையை பார்க்கலாம்.. ரெடி... இஸ்டார்ட் மீஜிக்....:))
Posted By..